
நாட்டின் தேசிய மொழி இந்திதான். இந்தி மொழி இல்லாமல் நாட்டுக்கு வளர்ச்சி இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறிய கருத்தால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வெங்கையா நாயுடு இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார்.
பேட்டி
ஆமதாபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று கலந்து கொண்டார்.
இந்தியை புறக்கணிக்க கூடாது
அந்த நிகழ்ச்சி இடையே நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ இந்தி என்பது நாட்டின் தேசிய மொழி. இந்தி இல்லாமல், புறக்கணித்துவிட்டு நாட்டுக்கு வளர்ச்சி என்பது சாத்தியமில்லாதது. ஆங்கிலம் படிக்கத் தொடங்கியபின், ஒவ்வொருவரும் ஆங்கிலேயர் போல நடந்து கொள்வது துரதிருஷ்டம்.
மனநிலை மாறிவிட்டது
நான் ஆங்கிலேயருக்கு எதிரானவன். ஆனால், மொழிக்கு அல்ல. நாம் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், ஆங்கிலம் படித்தபின், நம் அனைவரின் மனநிலையும் மாறிவிட்டது. இது தவறு. இது நாட்டின் நலனுக்கு எதிரானது.
இந்தி கற்க வேண்டும்
ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொருவரும் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொள்வது அவசியம். நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தி மொழி பேசுகிறார்கள்.ஆதலால், இந்தி கற்றுக்கொள்வது அவசியமானது. அதற்கு முன்னதாக தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
எதிர்ப்பு
சமீப காலமாக மத்திய அரசு இந்தி திணிப்பு என்றவிசயத்தை தீவிரமாக இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது திணித்து வருகிறது. இதற்கு கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மு.க. ஸ்டாலின்
குறிப்பாக இந்தி மொழி தேசிய நெடுஞ்சாலையின் மைல்கற்களில் எழுதப்பட்டு இருப்பதைப் பார்த்து, இந்திக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது இருக்கும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதேபோல, பெங்களூரு நகரில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்தி மொழி எழுதப்படுவதற்கு எதிராகவும் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, இந்தி மொழியே எம்.பி.களும், அமைச்சர்களும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்ற நாடாளுமன்ற குழுவின் அறிக்கைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.