
டெல்லியில் இருந்து ஹரியானாவுக்கு ரெயிலில்பயணம் செய்த இளைஞர் ஒருவர் ரம்ஜானுக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததால், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அவரைக்கத்தியால் குத்திக் கொலை செய்தது.
ஹரியானா மாநிலம், பாலாப்கார்க் மாவட்டம்,காண்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூனைத்(வயது 19). இவரின் சகோதரர்கள்மோசின், ஹசிம்(20), மொயின்(17). இவர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகைக்காக பொருட்கள், உடைகள், உணவுகள் வாங்க டெல்லிஜூம்மா மசூதி பகுதிக்கு சென்று இருந்தனர்.
அங்கு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, ஹரியானா வழியாகச் செல்லும் மதுரா ரெயிலில் பாலாப்கார்க் செல்ல ஏறினர்.
ரெயில் ஓக்லா ரெயில் நிலையம் வந்தபோது, 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் ரெயிலில் இந்த முஸ்லிம் இளைஞர்கள் பயணித்த பெட்டியில் ஏறினர். ரெயில் சென்று கொண்டு இருக்கும் போதே, இந்த இளைஞர்கள் அணிந்திருந்த உடை குறித்தும், முகத்தில் இருந்த தாடி, தலையில் அணிந்திருந்த குல்லா ஆகியவை குறித்து அந்த கும்பல் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்ததாக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் தேசத் துரோகிகள் என்று கூறி அந்த முஸ்லிம் இளைஞர்கள் அணிந்திருந்த குல்லாவைப் பிடித்து இழுத்தும், தாடியைப் பிடித்து இழுத்தும் அந்த கும்பல் வம்பு செய்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே ரெயிலில் லேசான கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த பையில் மாட்டிறைச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், பாலாபார்க் ரெயில் நிலையம் வந்தபோது ஜூனைத் என்ற இளைஞரை கத்தியால் குத்தினர்.
இதையடுத்து, ரெயில்வே போலீசார் விரைந்து வந்து கத்திகுத்து பட்ட ஜூனைத், மற்றும் மற்ற 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜூனைத் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஜூனைத்தின் சகோதரர் ஹசீம்கூறுகையில், “ ரெயில் நாங்கள் அமைதியாக வந்து கொண்டு இருந்தோம். ஓக்லா ரெயில்நிலையத்தில் 20 பேர்கொண்ட கும்பல் ரெயிலில்ஏறினர்.
அவர்கள் எங்களுடன் தொடர்ந்து வம்பு செய்து கொண்டு வந்தனர். எங்களின் உடை, தாடி, குல்லா ஆகியவை பற்றி தவறாகவும், மதத்தை இழிவுபடுத்தியும் பேசினர். எங்களை தேசப்பற்று இல்லாதவர்கள், தேசவிரோதிகள் என்று அழைத்தனர். மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் தேசவிரோதிகள் என்றனர்.
ஒருகட்டத்தில் நாங்கள் அடுத்து வரும் ரெயில்நிலையத்தல் இறங்கிவிடலாம் என எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கச் சென்றோம் .
ஆனால், அதற்கும் எங்களுக்கு அனுமதி மறுத்து தடுத்தனர். எங்களுக்கு உரிய இருக்கையையும் அபகரித்துக்கொண்டு எங்களை தாக்கத் தொடங்கினர். பாலாபார்க் ரெயில்நிலையம் வந்தபோது என் சகோதரர் ஜூனைத்தைகத்தியால் மார்பு, கழுத்துப்பகுதியில் குத்தினார்கள்’’ என்றார்.
இது குறித்து ரெயில்வே போலீசார், தரப்பில், கூறுகையில், “ ரெயிலில் இருக்கை பிடிப்பதில் இருதரப்பும் இடையே நடந்தபோட்டியில் ஒரு குத்திக்கொல்லப்பட்டார்’’ எனத் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐ.பி.சி. 323, 302, 34,324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலைத் தேடி வருகின்றனர்.