
கடந்த சில நாட்களாக கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் 4 மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்திய வானிலை ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், லட்சத்தீவு, மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 - 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 6ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி அது 7அல்லது 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக கூடும் அது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழை முதல் மிக கனமழையைக் குறிக்கிறது, ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிகக் கனமழை பெய்யும். மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரை கனமழையை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.