
கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சிம்லாவில் உள்ள கிருஷ்ணா நகரில் இன்று காலையில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு இருந்த 4 வீடுகள் நொறுங்கி விழுந்ததை நம்மால் வெளியான காணொளியில் காணமுடிகிறது. மேலும் அந்த பகுதியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
அந்த பகுதியில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்ட பிறகும், இந்த நிலச்சரிவு பிரச்சனை நீடிக்கிறது என்று சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளுர்வாசி ஒருவர் கூறினார். இடிபாடுகளில் சிக்கி இருவர் பரிதாபகரமாக இறந்துள்ளனர் என்றும், மேலும் 4 பேர் அதில் சிக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு குறைந்தது 15 குடும்பங்கள் வீடிழந்து விட்டதாக அவர் கூறினார்.
நேற்று திங்களன்று, சிம்லாவில் இரண்டு நிலச்சரிவுகள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது, ஒன்று சம்மர் ஹில்லில் உள்ள சிவன் கோயிலிலும் மற்றொன்று ஃபாக்லியிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது, நிலச்சரிவுகள் மற்றும் சாலைகள் துண்டிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.