இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை... மருத்துவ நிபுணர்கள் குழு பிரதமரிடம் பரிந்துரை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 11, 2021, 11:29 AM IST
Highlights

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் சற்றே குறைந்து வருகிறது. முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி, கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக கருதப்படுகிறது. 

இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவிஷீல்ட், கோவாக்சின்  தடுப்பூசிகளோடு ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் சேர்ந்து 3 தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில்  24 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 649 இதுவரை தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 74 ஆயிரத்து 672 ஆகும். 

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழு தடுப்பூசி செலுத்துவது குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்பித்துள்ளது. அதில், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனை தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த குழு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய மருத்துவ வல்லுநர்கள் குழு, அதை விட தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளாவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. அதிக அளவில் கொரோனா தொற்று பரவும் இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

டெல்டா வகை தொற்று அதிகமுள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் கால அவகாசத்தை குறைக்கலாம் என்றும் பரிந்துரைந்துள்ளது. தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸை செலுத்தும் கால அவகாசம் 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

click me!