ஒரே நாளில் இருமுறை ஹரிவராசனம்..! சபரிமலையில் நடந்த அபூர்வ நிகழ்வு..!

By Manikandan S R SFirst Published Jan 20, 2020, 5:53 PM IST
Highlights

ஜனவரி 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானம் இரவு அடைக்கப்படவில்லை. 1.30 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து பதினெட்டாம் படியேறி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு  2.09 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெற்றது. அது நிறைவடைந்த பின்னர் அதிகாலையில் ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. 

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடம் தொடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சபரிமலை நடைதிறக்கப்பட்டது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜைக்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் மிக முக்கிய நிகழ்வான மகர விளக்கு திருநாள் ஜனவரி 15ம் தேதி நடைபெற்றது. அந்த நாளில் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் சபரிமலை சன்னிதானத்தில் மகரசங்கரம பூஜை நடைபெறும்.

இந்தவருடம் ஜனவரி 15ம் தேதி அதிகாலை 2.09 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. இதற்காக ஜனவரி 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானம் இரவு அடைக்கப்படவில்லை. 1.30 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து பதினெட்டாம் படியேறி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு  2.09 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெற்றது. அது நிறைவடைந்த பின்னர் அதிகாலையில் ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது.

பின் மீண்டும் 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் நடை திறக்கப்பட்டது. அன்று மாலையில் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் சாற்றப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்தநேரத்தில் பொன்னம்பலமேட்டில் தோன்றிய மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் மீண்டும் இரவு 11 மணியளவில் ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. 15ம் தேதி மட்டும் ஒரே நாளில் இரண்டு முறை ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டிருக்கிறது.

சபரிமலையில் நள்ளிரவு கடந்தும் நடைதிறக்கப்பட்டு அதிகாலையில் ஹரிவராசனம் இசைக்கப்பட்டது அபூர்வ நிகழ்வாக பக்தர்களால் கருதப்படுகிறது.

Also Read:  பள்ளிவாசலில் நிகழும் அய்யப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல்..! இந்து-முஸ்லீம் மக்களின் அசைக்கமுடியாத ஒற்றுமை..!

click me!