மோடி ஒண்ணுமே செய்யலைனு பிதற்றுபவர்களின் மூக்கை உடைத்த குருமூர்த்தி..! மக்கள் நலத்திட்டங்களின் முழு பட்டியல்

By karthikeyan VFirst Published May 29, 2020, 6:50 PM IST
Highlights

கொரோனா நெருக்கடிக்கு இடையில் மக்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களையும் அதன் பலன்களையும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். 
 

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீண்டு இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக உருவாக்கும் நோக்கில் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தை அறிவித்து அதற்காக ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த, பொருளாதார மீட்பு சிறப்பு தொகுப்பு நிதியான ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டார்.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோர், நிதி நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், சுய உதவிக்குழுக்கள், பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறக்கூடிய வகையில், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது. 

மத்திய அரசின் அறிவிப்புகள் போதாது என்றும் இவை வெற்று அறிவிப்புகள் தான் என்றும் ஏழை மக்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது என்றும் எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார நிபுணர்களும் விமர்சிக்கும் நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசின் மக்கள் நல மற்றும் பொருளாதார மீட்பு திட்டங்களையும், அவற்றின் பலன்களையும் குருமூர்த்தி பட்டியலிட்டுள்ளார். 

இதுதொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் மோடியின் பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. அவையாவன: அரசாங்கத்தின் நேரடி ஒதுக்கீடு, வங்கி கிரெடிட் மற்றும் ஆர்பிஐ வங்கிகளுக்கு அளித்த சலுகைகள். மோடி எதிர்ப்பாளர்கள், வங்கிகள் மூலமாக வழங்கக்கூடிய கடன் அறிவிப்புகள் தான் அதிகமாக இருப்பதாகவும் அரசின் நேரடி பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும் விமர்சிக்கிறார்கள். இந்திய பொருளாதார அமைப்பை பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் தான் இந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான நிதி சார்ந்த உறவு குறித்த புரிதலும் இல்லை.

பிரதமர் மோடியின் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பை ஜி7 நாடுகளுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது முட்டாள்தனமானது. இந்திய வங்கிகள் அமைப்பு, ஜி7 நாடுகளின் வங்கி கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்த வேறுபாடுகளை அறிந்துகொள்ளாதவரை, பிரதமர் மோடியின் நிதி தொகுப்பின் அருமையை, விமர்சிப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது. 

அமெரிக்காவில் பொதுத்துறை வங்கிகளுக்கு முக்கியத்துவமே கிடையாது. அமெரிக்காவில் வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பு 20.4 டிரில்லியன் டாலர். இதில், பொதுத்துறை வங்கிகளின் பங்கு வெறும் 0.03% தான். பிரிட்டனில் வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பு 10 டிரில்லியன் டாலர். இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 8.6% மட்டுமே. ஃப்ரான்ஸிலும் மொத்த வங்கி மதிப்பில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு வெறும் 2.6 சதவிகிதம் தான். ஜி7 நாடுகள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது கிடையாது. அவர்கள் தேவையான பணத்தை அச்சிட்டு கொள்கிறார்கள்.

இந்தியாவின் வங்கி கட்டமைப்பு, ஜி7 நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவில் பாதிக்கு பாதி சேமிப்புகள் வங்கிகளில் தான். அதில், பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 70%. 2.5% நிதி சேமிப்புகள் ஸ்டாக்கில் உள்ளன.  இந்திய நிதி அமைப்பின் பிரதான அங்கமே பொதுத்துறை வங்கிகள் தான். பொதுத்துறை வங்கிகள் தான் மத்திய, மாநில அரசுகளுக்கு கடன் கொடுக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் அதிகமான தொகையை வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றுவிட்டால், வங்கிகளால் தொழில்துறைக்கும், தனிநபர்களுக்கும் கடன் வழங்கமுடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டுக்கான மத்திய, மாநில அரசுகளின் கடன் தேவை மேலும் 60%அதிகரிக்கும் என தெரிகிறது. அதனால்தான் மத்திய அரசு, கொரோனா நெருக்கடியை சமாளிக்க வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனை குறைத்து  கொண்டுள்ளது. 

மத்திய அரசு நிதி தொகுப்பின் நோக்கம்:

பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை போக்குவதுதான் மோடி அறிவித்த நிதி தொகுப்பின் பிரதான நோக்கம். மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதியின் முதல் இலக்கு, ஏழை மக்களின் கஷ்டத்தை போக்குவது, அடுத்தது நடுத்தர குடும்பத்தினரை பாதுகாப்பது, அதற்கு பின்னர் தான் மற்ற தரப்புகளெல்லாம்.. இந்திய பொருளாதாரத்தை ரீஸ்டார்ட் செய்யும் நடவடிக்கைகள், நிவாரணத்தையும் உள்ளடக்கியவை.

அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவு பொருட்கள் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மார்ச் 26ம் தேதி மோடி அறிவித்தார். ஏப்ரல் மாதத்திலேயே 67.65 டன் உணவு தானியங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மாநிலங்கள் பெற்றுள்ளன. 8 கோடி மக்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மோடி உறுதியளித்தார். அதில், புக்கிங் செய்யப்பட்ட 5 கோடியே 9 லட்சத்தில் 4 கோடியே 82 லட்சம் பேருக்கு சிலிண்டர்கள் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் 38 கோடி பயனாளர்கள் பயன்பெற்றுள்ளனர். ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.16,394 கோடியும், பெண்களுக்கு ரூ.10,295 கோடியும், மூத்த குடிமக்கள், கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றொருக்கு ரூ.1,405 கோடியும் பதிவுசெய்யப்பட்ட 3.5 கோடி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.3,492 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 

மார்ச் 26ம் தேதிக்கு பிறகு, மீண்டும் மே 12ம் தேதி, பொருளாதாரத்தை மீட்டு, சுயசார்பு பொருளாதார நாடாக இந்திய பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாக மாபெரும் அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.  ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை 5 கட்டங்களாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.3 லட்சம் கோடியும், நிதிக்குள் நிதியாக ரூ.50 ஆயிரம் கோடியும், துணை கடனாக ரூ.20 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடியும் நடைபாதை வியாபாரிகளுக்கும், முத்ரா கடனுக்காகவும் ரூ.6,500 கோடியும் ஒதுக்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வது, மீனவர்கள், சிறு, குறு உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடியும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது. ஏழை மக்களுக்காக ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.3 கோடி ஒதுக்கப்பட்டது. நடுத்தர மக்களுக்கான வீட்டுக்கடனுக்கு ரூ.70 ஆயிரம் கோடி, பிஎஃபிற்கு ரூ.9550 கோடி என நடுத்தர மக்களுக்காக மொத்தம் ரூ.1,29,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்தும் கூட, மத்திய அரசு, அதன் பாக்கெட்டிலிருந்து எதையும் செய்யவில்லை என விமர்சிக்கிறார்கள். சீதாராம் யெச்சூரி, இது பணக்காரர்களுக்கான அறிவிப்பு என்கிறார். சிதம்பரம், வெற்று ஷீட் என்று விமர்சிக்கிறார். ஆனால் மோடி பெரும்பாலான மக்களுக்கானதை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். இதுவரை அறிவிக்கப்பட்டதே, இறுதியானது அல்ல என்று குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 
 

click me!