அறிவே இல்லாமல் வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுறீங்களே..! எக்ஸ்பர்ட்ஸுக்கு எகனாமிக்ஸ் சொல்லிக்கொடுத்த குருமூர்த்தி

By karthikeyan VFirst Published May 29, 2020, 4:07 PM IST
Highlights

மத்திய அரசின் சுயசார்பு பாரத திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி போதாது எனவும் மத்திய அரசின் அறிவிப்புகளை விமர்சிக்கும் பொருளாதார நிபுணர்களை துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விளாசியுள்ளார். 
 

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீண்டு இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக உருவாக்கும் நோக்கில் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தை அறிவித்து அதற்காக ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த, பொருளாதார மீட்பு சிறப்பு தொகுப்பு நிதியான ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டார்.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோர், நிதி நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், சுய உதவிக்குழுக்கள், பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறக்கூடிய வகையில், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது. 

ஆனால், இந்த ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகள் அனைத்து வெற்று அறிவிப்புகளே என்று விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், இந்த நிதி போதாது என்றும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. மேலும், மக்களின் கைகளுக்கே பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் தான் மக்களிடமே நேரடியாக பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றன என்றால், ரகுராம் ராஜன், நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி ஆகிய பொருளாதார நிபுணர்களும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். 

இந்நிலையில், மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துபவர்கள், அதற்கான நிதி ஆதாரத்திற்கான வழியையும் கூற வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ள குருமூர்த்தி, இந்திய பொருளாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை பற்றி அறிந்த நிபுணர்களும் எதிர்க்கட்சிகளை போல பேசாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸுக்கு துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், பொதுவாகவே இந்த பொருளாதார நிபுணர்கள், திடமான கருத்துகளை சொல்லமாட்டார்கள். திடமற்ற, நம்பிக்கையற்ற அரைகுறையான கருத்துகளைத்தான் சொல்வார்கள். இது காலங்காலமாக நடந்துவருகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி போதாது. இது மிகவும் குறைவானது; நாட்டின் மொத்த ஜிடிபியில் 1% தான் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். பொதுவாக 10 எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றால், 10 வெவ்வேறு விதமான பார்வையை கொண்டிருக்கும். ஆனால் பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதி அறிவிப்பில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன. அவர்களை பொறுத்தமட்டில் பிரதமர் மோடியின் திட்டங்களை எதிர்க்க வேண்டும்.. அவ்வளவுதான். 

சுயசார்பு இந்தியா திட்ட அறிவிப்பை, ப.சிதம்பரம் “வெற்று பக்கங்கள்” என்று விமர்சித்துள்ளார். அகிலேஷ் யாதவ் “வெற்று பேச்சு” என்று சாடியுள்ளார். மம்தா பானர்ஜி, அந்த அறிவிப்புகளை “ஜீரோ” என்றும் சந்திரசேகர் ராவ் “பொய்யானவ” என்றும் விமர்சித்துள்ளனர். ரூ.20 லட்சம் கோடியையும் மக்கள் கைகளில் நேரடியாக வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். இந்திய அரசியலின் சூழ்ச்சிக்கார நரியான சரத் பவார் மட்டும்தான் பொருளாதார நிபுணரை போல கருத்து கூறியிருக்கிறார். ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகள் உடனடி பலனைத் தராது என்று சரத் பவார் கூறினார். அதாவது, அந்த திட்டத்தை நல்லது அல்லது கெட்டது என்று திட்டவட்டமாக எதுவும் சொல்லவில்லை. 

மத்திய அரசு, அதன் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாயைக்கூட ஒதுக்கவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சிக்கிறார் என்றால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அப்படித்தான் பேசுவார் என்பது நிதர்சனம். ஆனால் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, 60% மக்களுக்கு, ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் கொடுங்கள் என்று வலியுறுத்துவது முட்டாள்தனமானது; ஆபத்தானது.

இறையாண்மை அரசாங்கம் மூன்று வழிகளில் தான் வருமானம் ஈட்ட முடியும். 1) மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி வருவாய், 2) சொத்துக்களை விற்பது, 3) ரிசர்வ் வங்கியிடம் ரூபாயை அச்சிட கோருவது ஆகிய மூன்று வழியில் தான் அரசுக்கு பணம் கிடைக்கிறது.

இதில், சொத்துக்களை விற்று, அதன்மூலம் வருவாய் ஈட்டுவது உடனடி தீர்வு கிடையாது. மூன்றாவது வழியான, பணத்தை அச்சுடுவதை, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் மூலம் பணத்தை அச்சிடுவதில் மத்திய அரசு அணுக முடியாமல் செய்துவிட்டார் ப.சிதம்பரம். எனவே அரசுக்கு வரியின் மூலம் மட்டும்தான் வருவாய் கிடைக்கிறது. 1968லிருந்தே, வரி வருவாயை விட அதிகமான தொகையைத்தான் அரசு செலவு செய்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுமே பற்றாக்குறையான பட்ஜெட் தான். வங்கிகள், பிஎஃப், சிறுசேமிப்பு, இன்சூரன்ஸ் நிதி ஆகியவற்றிலிருந்து கடன் வாங்கித்தான் அரசு சமாளித்து கொண்டிருக்கிறது. 

60 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கித்தான், வரி வருவாய்க்கும் - செலவு செய்வதற்கும் இடையேயான பெரும் இடைவெளியை நிரப்பிவருகிறது. எஃப்.ஆர்.பி.எம் சட்டம்(நிதி பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம்) நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி-யில் 3%க்கு மேல் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்கிறது. ஆனால் கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஜிடிபி-யில் 6-7% இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எஃப்.ஆர்.பி.எம் லிமிட்டை விட இது இரண்டு மடங்கு அதிகம். 

எதிர்க்கட்சிகள், அரசாங்கம் இன்னும் அதிகமான நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் எதிலிருந்து எடுத்து செலவு செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை. அரசாங்கம் அதிக செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள், அதற்கான நிதி ஆதாரத்தை சொல்வதில்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அப்படியே பிரதிபலிக்கும், நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர்(அபிஜித் பானர்ஜி) உட்பட சில பொருளாதார வல்லுநர்களாவது, நிதி ஆதாரத்தை சொல்ல வேண்டும். அவர்களும் சொல்வதில்லை. இப்போதெல்லாம், பொருளாதார நிபுணர்களுக்கு இலக்கணம் என்னவென்றால், ஒரு கருத்தை சொல்லிவிட்டு, மறுநாளே அதிலிருந்து முரண்பட்டு பேசுவது அல்லது அந்த கருத்தை வாபஸ் பெறுவதுதான். 

இந்தியா மட்டுமல்ல; வளர்ந்த வல்லரசு நாடுகளே ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்கின்றன. ஆனால் அந்த நாடுகள் இந்தியாவைவிட அதிகமாக கடன் வாங்குகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 238% கடன் வாங்கும் ஜப்பான் தான், கடன் வாங்குதலில் முன்னணியில் உள்ளது. அமெரிக்கா 110%, ஐரோப்பிய யூனியன் நாடுகள் 84%(ஜிடிபியில்) இந்தியா வெறும் 69%த்துடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் ஜிடிபியை விட இரண்டரை மடங்கு அதிகமான கடனை பெற்றும், கொரோனா நிதி தொகுப்பாக எப்படி 1.1 டிரில்லியன் டாலரை ஒதுக்குகிறது, அமெரிக்கா எப்படி 2.2 டிரில்லியன் டாலரை ஒதுக்கிறது என்றால், அந்தந்த நாட்டு ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுத்தான். அமெரிக்கா 3.5 டிரில்லியன் மதிப்பிற்கு புதிய டாலர்களை அச்சிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஜப்பானும் வழக்கம்போலவே ரூபாயை அச்சிடுகின்றன. ஜப்பான் 276 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு, அந்நாட்டின் கரன்சி(யென்)யை அச்சிட்டுள்ளது. 

ஐரோப்பிய யூனியன் நாடுகள், ரூ.2.5 டிரில்லியன் யூரோஸ் அச்சிட்டுள்ளன. உலகளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த இந்த நாடுகள், டாலர்களையும் யூரோக்களையும், யென்னையும் அதிகமாக அச்சிட்டு, அவற்றை இந்தியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலோ முதலீடு செய்து, அவர்களது பண மதிப்பை வலுப்படுத்துகின்றன. எனவே தான் ஜப்பான் அதன் ஜிடிபியில் 21 சதவிகிதத்தையும், அமெரிக்கா 10 சதவிகிதத்தையும், ஃப்ரான்ஸ் 5 சதவிகிதத்தையும், ஜெர்மனி 4.9 சதவிகிதத்தையும் கொரோனா தொகுப்பு நிதியாக ஒதுக்குகின்றன. எனவே ரூபாயை அவர்களுக்கு ஏற்றபடி அச்சிடும், அந்த வல்லரசு நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடமுடியாது.

ஆனாலும் இவையனைத்தையும் அறிந்த பொருளாதார நிபுணர்கள், வளர்ந்த வல்லரசு நாடுகளைவிட குறைவாக நிதி ஒதுக்குவதாக குற்றம்சாட்டுவது முட்டாள்தனம். இந்தியாவை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு குறைவான நிதி ஒதுக்குவதாக குற்றம்சாட்டுவது தவறு. வளர்ந்த நாடுகள், அவர்களாகவே அதிகமாக ரூபாய் நோட்டுகளை போதுமான அளவிற்கு அச்சிடுவதால் அவர்கள் அதிக நிதி ஒதுக்குகின்றன. எனவே அந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடக்கூடாது. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளவும், அதை வெளிப்படையாக சொல்லவும், ஏன் பொருளாதார நிபுணர்கள் மறுக்கின்றனர்? அரசின் வரி வருவாய்க்கு மாற்று, இந்தியாவில் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மட்டுமே. அதனால் தான் அந்த ரீதியில் நிதி தொகுப்பு திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பண ஒழுங்கு விதிமுறைகளை வகுத்த வளர்ந்த நாடுகளே, அந்த விதிமுறைகளை 2008லேயே மீறிவிட்டன. அது உலக பொருளாதாரத்திலும் இந்தியாவிலும் குளறுபடியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை பற்றி ரகுராம் ராஜன் மட்டுமே பேசியிருக்கிறார். வேறு யாருமே பேசவில்லை. நோபல் பரிசு வென்றவர் கூட பேசவில்லை.

எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள பிரதமர் மோடி அரசு 2016ல் முயற்சித்தது. ஆனால் ஆர்பிஐ தடுத்துவிட்டது.  இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆர்பிஐ தடுத்துவிட்டது. இந்திய அரசு, வங்கிகளிடம் அதிகமாக கடன் வாங்கினால், தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் வங்கிகளால் அதிக கடன் வழங்க முடியாது. அது பொருளாதாரத்திலும் பிசினஸ்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உண்மையை பொதுமக்களுக்கு சொல்ல பொருளாதார நிபுணர்கள் மறுக்கின்றனர். அரசாங்கம் அதிகமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறுபவர்கள், அதற்கான நிதி ஆதாரம் குறித்து பேச மறுக்கின்றனர். சாதாரண நாட்களில் பொருளாதார நிபுணர்கள் இப்படி பேசினால் கூட பரவாயில்லை. ஆனால் கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில், பொருளாதார நிபுணர்கள் இதுமாதிரி பொறுப்பற்றத்தனமாக பேசுவது, எதிர்க்கட்சிகளின் வெற்று விமர்சனங்களை அங்கீகரிக்கும் விதமாக அமைகிறது.

கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், மக்களால் பொருளாதார நிபுணர்களாக நம்பப்படுகிறவர்கள், மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பேச வேண்டும். அதைவிடுத்து, மக்களிடையே தவறான கருத்துகளை பரப்பி தூண்டிவிடும் எதிர்க்கட்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாகவோ, எதிர்க்கட்சிகளின் தவறான கருத்துகளுக்கு தீணிபோடும் விதமாகவோ பேசக்கூடாது என்று குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். 
 

click me!