
இயல்பான காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் தென்படும் இந்த வகை வைரஸ், வெகு சீக்கிரத்தில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது எளிதில் பரவக்கூடிய நோய் இல்லை என்றாலும், குஜராத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 15 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை, மாநில சுகாதாரத் துறை அளித்த தரவுகளின்படி குஜராத் மாநிலத்தில், சுமார் 29 பேர், இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையின்படி, வரும் நாட்களில் "சண்டிபுரா வைரஸ்" வழக்குகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவக்கூடும் என்றும் மருத்துவர்களும், அரசும் அஞ்சுவதாக கூறியுள்ளது.
அந்த சந்தேகத்திற்குரிய 29 வழக்குகளில், 26 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதே போல இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் மரணித்த 15 பேரில், 13 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீடீர் பரவலுக்கு என்ன காரணம்?
இந்த வைரஸ் பரவ பிரதான காரணமாக கூறப்படுவது "மணல் ஈக்கள்" தான், இதை ஆங்கிலத்தில் Sand Fly என்று அழைப்பார்கள். மழைக்காலம் நெருங்கும் இந்த நேரத்தில், இந்த வகை வைரஸ்கள் அதிக அளவில் பரவுகிறது. சில சமயங்களில் ஒட்டுண்ணிகள் மற்றும் கொசுக்கள் மூலமாகவும் இது பரவுகிறது.
பருவமழை வருவதற்கு முன், சுவர்களில் உள்ள இடைவெளிகளை மறைக்க கிராம மக்களுக்கு அறிவுறுத்துவது, சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார குழுக்கள் மேற்கொண்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது. பிரபல மருத்துவர் சௌதரியின் கூற்றுப்படி, CHPV வைரஸ் என்பது கிராமப்புறங்களில் மிகவும் பொதுவான ஒன்று, ஏனெனில் அதன் இனப்பெருக்கம் பொதுவாக மரங்களில் உள்ள துளைகள் அல்லது வீடுகளின் செங்கற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் தான் நடக்கும் என்கிறார் அவர்.