
வருவாய் உபரி ஏற்பட்டபின், சரக்கு மற்றும் சேவை வரியின்(ஜி.எஸ்.டி.) விகிதங்களை குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்தார்.
ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள்
அரியானா மாநிலம், பரிதாபாத்தில் சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைமருந்து தடுப்பு பிரிவு ஆகியவற்றுக்கான தேசிய பயிற்சி மையத்தின் சார்பில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில பயிற்சி முடித்த 67-வது பேட்ஜ் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.
அப்போது அவர் கூறியது-
மாற்றம்
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. இந்த வரி முறையில் நமக்கு அதிகமான முன்னேற்றங்கள் செய்ய வாய்ப்புகளும், வசதிகளும் இருக்கின்றன. வரிச் சுமையைக் குறைக்கவும், சிறு வர்த்தகர்களின் நலனைக் கருத்திக் கொண்டும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் செய்ய வேண்டும்.
உபரி தேவை
ஜி.எஸ்.டி. வரியில் இருந்து உபரி வருவாய் கிடைக்கத் தொடங்கியபின், மிகப்பெரிய அளவில் வரிச் சீர்திருத்தம் இருக்கும். அதாவது, இப்போது இருக்கும் ஜி.எஸ்.டி. வரி படி நிலைகளான 5, 12, 18, 28 சதவீதங்களை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு வரி வருவாய் உபரியாக வர வேண்டும்.
குறைக்க வாய்ப்பு
மறைமுக வரி என்பது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய சுமையாக இருந்து வருகிறது. மக்கள் அதிகமாக நுகரும் பொருட்களுக்கான வரி குறைக்கப்படவும் வாய்ப்பு உண்டு. அதேசமயம், நேர்முக வரி எனக் கூறப்படும் வருமான வரியை வசதியானவர்கள் செலுத்துகிறார்கள். சமூகத்தில் நலிந்த பிரிவினர் செலுத்துவதில்லை. மறைமுக வரி என்பது அனைவரையும் பாதிக்கும் என்பதால், அதைக் கருத்தில் கொண்டு குறைக்கப்படும்.
நம் நாட்டில் உள்ள மக்கள் வரி செலுத்தாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் வேண்டும் என்று கேட்கும் போது, அதற்கு ஏற்றார்போல் வரி ெசலுத்தவும்கடமைப்பட்டவர்கள். அனைத்து விதமான வளர்ச்சிப் பணிகளுக்கும், நிர்வாகத்துக்கும் வரி என்பது அவசியமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.