
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்தியாவின் கானக்குயில், வானம்பாடி, பாலிவுட்டின் நைட்டிங்கேர்ள் என பல்வேறு பெருமைமிகு பெயர்களை தாங்கியவர் பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 13ஆவது வயது முதல் பாட ஆரம்பித்த இவர், 80 ஆண்டுகாலம் மூன்று தலைமுறை இந்தியர்களைக் கட்டியாண்டார். பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என அவர் பெறாத விருதுகளே இல்லை. லதா மங்கேஷ்கர் இதுவரை தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம் என 36 மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனையும் படைத்தவர். தன் பெயரை தவிர்த்துவிட்டு இந்திய சினிமா வரலாறை உங்களால் எழுதவே முடியாது என்ற நிலையை உருவாக்கியவர் லதா மங்கேஷ்கர்.
இந்திய இசை ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அவரது குரல் இன்றோடு இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. கடந்த சில நாட்களாகவே அவர் முதுமைக்கால நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதோடு கொரோனா தொற்றும் இணைந்துகொள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது. அவரின் மறைவு அனைத்து தரப்பினரின் மனதையும் உலுக்கியுள்ளது. 1929 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் அவர் பிறந்தாலும், திரைத்துறையில் கோலோச்சிய பிறகு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தங்கிவிட்டார். மகாராஷ்டிரா அவரின் சொந்த மாநிலமாகவே மாறிவிட்டது.
இதன் காரணமாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளார். இறுதிச் சடங்கு மாலை 6.30 மணியளவில் மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேசியக் கொடிகள் இரண்டு நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் துக்கம் அனுசரிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடும் இந்திய வீரர்கள் கருப்பு பட்டையுடன் களமிறங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.