4,700 பேருக்கு தவறான ஆப்ரேஷன்... பிரபல நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

By vinoth kumarFirst Published Sep 5, 2018, 6:09 PM IST
Highlights

தவறான இடுப்புமாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 4,700 பேருக்கு ரூ.20 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்துக்கு மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

தவறான இடுப்புமாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 4,700 பேருக்கு ரூ.20 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்துக்கு மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் சார்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையாலும், கருவிகள் பொருத்தியதிலும் நோயாளிகளுக்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. 

இதையடுத்து, நோயாளிகள் தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் நோயாளிகளுக்கு 2500 கோடிடாலர் இழப்பீடு வழங்க ஜான்ஸன் அன்ட் ஜன்ஸன் நிறுவனம் சம்மதித்தது. ஆஸ்திரேலியாவில் 250 கோடி டாலர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் இந்தியாவில் எதிரொலிக்கவே ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இடுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் தரப்பில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் இந்த சிகிச்சை நிறுத்தப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் மருத்துவர் அருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அந்த குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கியது. 4700 பேருக்கு இடுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் எனப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக மத்திய மருந்துகட்டுப்பாட்டு அமைப்பு ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் இழப்பீடு தொகை குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. ஆனால், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் தரப்பில் கூறுகையில், மொத்தம் 4700 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் 3600 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதேசமயம், மத்திய மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பிய கடிதம் எங்களுக்கு வந்து சேரவில்லை. கடிதம் கிடைத்தபின்புதான் அடுத்த கட்டம் குறித்து தெரிவிக்க முடியும். எங்கள் நிறுவனத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் பலர் நலமுடன் இருக்கிறார்கள். நலமுடன் இருப்பவர்களை அழைத்து வந்து ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனத் தெரிவித்தனர்.

click me!