
நாடுமுழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை அடுத்த ஒரு ஆண்டுக்கு உயர்த்தப்படாது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உறுதியளித்துள்ளார்.
உணவுபாதுகாப்பு சட்டம்
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை விலையை உயர்த்த வேண்டும். அவ்வாறு இந்த ஆண்டு உணவு தானியங்கள் விலை உயர்த்தப்பட வேண்டும்.
81 கோடி மக்கள்
இப்போது மத்திய அரசு கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை மானிய விலையில் கிலோ ரூ. 1 முதல் 3 ரூபாய் வரை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இதன் மூலம் நாடுமுழுவதும் 81 கோடி மக்கள் பயன்பெறுகிறார்கள். இதற்காக ரூ.1.4 லட்சம் கோடி மத்திய அரசு செலவு செய்கிறது.
விலை உயராது
இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ்பாஸ்வான் டுவிட்டரில் வௌியிட்ட அறிக்கையில், “ தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உணவு தானியங்கள் விலையை உயர்த்த வேண்டும். ஆனால், ஏழை மக்களின் நலன் கருதி, பிரதமர் மோடி வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்து, அடுத்த ஒரு ஆண்டுக்கு விலையை உயர்த்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். அடித்தட்டு மக்களின் நலனுக்காக விலை உயர்த்தப்படவில்லை.
எஸ்.சி.எஸ்.டி பிரிவு மக்கள்
மேலும், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக்களுக்கு நியாய விலைக்கடைகளை ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். இட ஒதுக்கீட்டின்படி நியாயக் கடைகளை ஒதுக்கினால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்களும் வேலைவாய்ப்பை பெறுவார்கள் ’’ எனத் தெரிவித்துள்ளார்.