
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்துக்கு மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், 16 மாநில முதல்வர்கள் முன்னிலையில் கடந்த 23-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அவரை முன் மொழிந்தனர்.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு மாற்று வேட்பாளராகவும், 4-வது செட் வேட்பு மனுவை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நேற்று நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.
ராம்கோவிந்தை வெங்கையா நாயுடு முன் மொழிந்துள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் மேகபதி ராஜமோகன் அதனை வழிமொழிந்தார். இந்த வேட்புமனுத் தாக்கலின் போது, மத்திய அமைச்ர்ரி ஆனந்த் குமார், பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கல் உடன் இருந்தனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு பின் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, எங்களின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அதிமுக ஆகியகட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.