
காவல் துறையினரால் ஏற்படும் மோசடிகள் குறித்து புகார் அளிக்க புதுச்சேரி அரசாங்கம் போலீஸ் புகார் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
பொதுமக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம். ஆனால் அப்படியான சம்பவங்களில் தற்போது காவல் துறை அதிகாரிகளே அதிகளவில் சிக்கி வருகின்றனர்.
பணமோசடி, நில மோசடி, சிலை கடத்தல், பான், குட்கா விற்பனைக்கு லஞ்சம் உள்ளிட்ட ஏராளமான குற்றச் சம்பவங்களில் காவல்துறையினரின் பெயர் அடிபட்டு வருகிறது.
தற்போது காவல் துறையினர் இதுபோன்ற சம்பவங்களில் அதிகளவில் சிக்கி வருகின்றனர். அவர்களைப் பற்றி எங்கு புகார் சொல்வது? என்பது பொதுமக்களின் கேள்வியாக இருந்தது.
தற்போது அதற்கும் ஒரு வழியினை புதுவை அரசு மேற்கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரியில், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை அளிக்க புதிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் மீதான குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த போலீஸ் புகார் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையம் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இயங்கி வருகிறது.
இங்கு போலீஸ் காவலர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்கள், அவர்களது செயல்பாடுகள் குறித்து வரும் புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜசூர்யா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினரால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் புகார் ஆணையம் சென்று தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அல்லது secypca.py@gov.in என்ற இணையதள முகவரிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.