
‘ரூபாய் நோட்டு தடை’ அறிவிப்பு அமல்படுத்தி வரும் 8-ந்தேதி யோடு ஒரு ஆண்டாகிவிட்டது. இதை கொண்டாடும் வகையில், 50 ஆயிரம் பேரை தேசிய கீதம், தேசப்பாடல் பாடும் நிகழ்ச்சி நடத்த ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முதலாம் ஆண்டு கொண்டாட்டம்
தலைநகர் ஜெய்பூரில் கொண்டாடப்பட உள்ள இந்த நிகழ்ச்சியை ராஜஸ்தான் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் மாநில இளைஞர் வாரியம்,ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற இந்து பக்தி மற்றும் சேவை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த விழாவில் முதல்வர் வசுந்தரா ராஜே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநில இளைஞர் வாரிய துணைத் தலைவர் சந்தீப்யாதவ் கூறுகையில், “ குடும்பம், சுற்றுச்சூழல் மற்றும் நாட்டை நேசிக்கும் வகையில், நமது கலாச்சாரம், மதிப்புகளோடு இளைஞர்கள் தொடர்பில் இருக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’’ என்றார்.
எதிர்ப்பு
ஆனால், ரூபாய் நோட்டு தடையால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் இன்னல்களைச் சந்தித்த நிலையில் அதை கொண்டாடும் மாநில அரசு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைரல் கூறுகையில், “ ரூபாய் நோட்டின் தோல்விகளை மறைக்க அதிகமான தேசப்பற்றை வெளிப்படுத்தி அதன் மூலம் மறைக்கப்பார்க்கிறார்கள். கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தப்பிக்க அதிகமான தேசப்பற்றையும், மதரீதியான அரசியலையும் வெளிப்படுத்துவது பா.ஜனதா அரசின் பழக்கம்’’ என்றார்.
சமீபத்தில் ஜெய்பூர் உள்ளாட்சி நிர்வாகம் விடுத்த சுற்றறிக்கையின் படி, அனைத்து பணியாளர்களும் காலை பணிக்கு வந்தவுடன் தேசிய கீதமும், மாலையில் பணி முடியும் போது வந்தே மாதரம் பாடலும் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.