கர்நாடகா சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் தாலியை கழற்றுமாறு அதிகாரிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநில சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத சென்ற மாணவிகள், தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு தங்களது தாலியை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமணமான இந்து பெண்கள் கழுத்தில் அணியும் தாலி, செயின் தவிர மாணவிகள் காதணிகள், செயின்கள், கால்விரல் மோதிரங்கள், மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களையும் கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த விவகாரம் அம்மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை “இந்துக்களுக்கு மட்டும்தானா?” என்று பாஜக எம்எல்ஏ பசங்கவுடா யத்னால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, ஹிஜாப் அணிந்த பெண்களையும் அதிகாரிகள் சோதனை செய்ததாகவும், ஆனால் அவர்களை உள்ளே அனுமதித்ததாகவும், தனது தாலியை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதாகவும் மாணவி ஒருவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி.. பொதுவெளியில் தன் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை - என்ன காரணம்?
“இந்து கலாச்சாரத்தில், தாலியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும்போது அவற்றை அகற்றுவோம். நான் எனது தாலியை, மெட்டியை கழற்றிவிட்டு உள்ளே சென்றேன். எப்படி ஹிஜாப் அணிந்த மாணவிகளை சரிபார்த்து அனுமதித்தார்களோ, அதே போல் எங்களையும் சரிபார்த்து உள்ளே அனுமதிருக்க வேண்டும்.” என்று அந்த மாணவி கூறினார்.
அண்மையில் நடைபெற்ற, பல்வேறு வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்புவதற்கான கர்நாடக தேர்வுகள் ஆணையத்தின் தேர்வில் சில மாணவர்கள் ஏமாற்றி பிடிபட்ட நிலையில் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது. தேர்வுக் கூடத்தில் புளூடூத் கருவிகளைப் பயன்படுத்திய மாணவர்கள் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.