Bengaluru : கர்நாடக அரசில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் பணியாற்றிய பிரத்திமா கே.எஸ் (45) பெங்களூரு சுப்ரமணியபோராவில் உள்ள தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் கொலையான அன்று இரவு, பெங்களூரில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்திற்கு அவரது கணவரும் மகனும் சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட கர்நாடக அரசு அதிகாரியின் சக ஊழியர்கள் "ஒரு துணிச்சலான அதிகாரி ஒருவர் இப்போது இல்லை" என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.
கர்நாடக சுற்றுச்சூழல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்த பிரதிமா "மிகவும் ஆற்றல் வாய்ந்த பெண்" என்றும், தனது கடின உழைப்பால் துறையில் நல்ல பெயரைப் பெற்றவர் என்றும் கூறியுள்ளார். அவர் மிகவும் தைரியமானவர், ரெய்டுகளாக இருந்தாலும் சரி, எந்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அதில் சிறப்பாக செயல்பட்டு, அவர் துறையில் பெரும் நற்பெயரைப் பெற்றவர் அவர் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், அண்மையில் அவர் சில இடங்களில் சோதனை நடத்தினார்," என்று மூத்த அதிகாரி தினேஷ் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் எதிரிகளை உருவாக்கிக்கொள்ளும் குணம் கொண்டவர் அல்ல என்றும், புதிய விதிகளின்படி, அவர் தனது வேலையைச் சிறப்பாகச் செய்து பெரிய பெயரைப் பெற்றார்" என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பெங்களூரு கிராமப்புறங்களில் பணிபுரிந்த பிரதிமா, ஷிவமோகாவில் உள்ள கல்லூரியில் எம்எஸ்சி படித்துள்ளார். பெங்களூரு ராம்நகரில் ஓராண்டுக்கும் மேலாக வேலை செய்து வந்துள்ளார். "தடயவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் அவர் இறந்து கிடந்த இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது என்பது சரியாகத் தெரிந்தவுடன், கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்" என்று போலீஸ் அதிகாரி ராகுல் குமார் ஷாஹபுர்வாட் கூறினார்.
இந்த கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.