திருப்பதியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு – கேமராவில் சிக்கிய மர்மநபர்

First Published Jan 31, 2017, 10:02 AM IST
Highlights


ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் தும்பசெருலா கிராமத்தை சேர்ந்தவர் மகாத்மா. இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு நவ்யா (5) என்ற மகளும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மகாத்மா, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்காததால், திருமலையில் உள்ள 2வது யாத்திரிகர்கள் சமுதாய கூடத்தில் குழந்தைகளுடன் தங்கினர்.

மாலையில் முடி காணிக்கை செய்துவிட்டு தரிசனத்துக்காக சென்றனர். நேற்று காலை சுமார் 6 மணிக்கு தரிசனம் முடித்துக்கொண்டு மீண்டும் யாத்திரிகர்கள் சமுதாய கூடத்துக்கு வந்தனர். அங்கு படுத்தவுடன், அசதியில் தூங்கிவிட்டனர். திடீரென எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகள் நவ்யாவை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அங்கு பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

உடனே தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, திருமலையில் உள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், குழந்தை நவ்யா கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருமலையில் உள்ள 2வது காவல் நிலையத்தில் மகாத்மா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருமலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, மகாத்மா, தனது குடும்பத்துடன் யாத்திரிகர்கள் சமுதாய கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது காலை 7.45 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தலையில் மஞ்சள் நிற போர்வையை போர்த்தி கொண்டு நவ்யாவை கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.

இதைதொடர்ந்து போலீசார், கீழ் திருப்பதியில் உள்ள பஸ் நிலையங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, திருப்பதி அருகே மகபூப் நகரில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் இருந்தார். அவருடன் சிறுமி தூங்கி கொண்டிருந்தாள்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். பின்னர், போலீசாரிடம் இருந்த புகைப்படத்தை வைத்து பார்த்தபோது, அவருடன் இருந்த சிறிமி நவ்யா என தெரிந்தது. உடனே சிறுமி நவ்யாவை அவரிடம் இருந்து மீட்டனர்.

இதையடுத்து போலீசார், அந்த ஆசாமியை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் ஆசாமியின் பெயர் பாலுச்சாமி என தெரிந்தது. தொடர்ந்து அவரிடம், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், மீட்கப்பட்ட நவ்யாவை, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

click me!