Gen Z Movement: கரப்பன்பூச்சி கட்சி: ஜென் Z-ன் அரசியல் எழுச்சியா, வீழ்ச்சியா?

Published : Jul 21, 2026, 07:20 PM IST
CJP Protest March Latest Photos

சுருக்கம்

Gen Z Movement: 'கரப்பன்பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை கோபத்தில் தொடங்கி சமூக வலைதளங்களில் பிரபலமானது. ஆனால், அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது உண்மையான சமூக மாற்றமா அல்லது வெறும் இணைய டிரெண்டா என்ற விவாதத்தை இந்த கட்டுரை ஆராய்கிறது.

இந்திய இளைஞர்களின் அதிருப்தியையும், வேலைவாய்ப்பு பற்றாக்குறை குறித்த கோபத்தையும் வெளிப்படுத்தும் ஒரு நையாண்டி முயற்சியாக தொடங்கப்பட்டது 'கரப்பன்பூச்சி ஜனதா கட்சி', சில மாதங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால் ஆரம்பத்தில் எழுந்த ஆதரவும் ஆர்வமும், தற்போது சர்ச்சைகள் மற்றும் கேள்விகளுக்கு இடமளிக்கும் வகையில் மாறியுள்ளது. சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இயக்கமா, அல்லது சமூக வலைதள டிரெண்டாக மட்டுமே மாறிய முயற்சியா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இந்த இயக்கத்தின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது, வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாக பரவிய சர்ச்சைக்குரிய கருத்துகள்தான். அந்த கருத்துகளுக்கு எதிராக, இளைஞர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக வலைதள வியூக நிபுணர் அபிஜித் தீப்கே, 2026 மே மாதத்தில் இந்த இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். பெயரே அரசியல் நையாண்டியை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததால், அது விரைவாக இணையத்தில் வைரலானது.

தொடங்கிய சில வாரங்களிலேயே இந்த இயக்கம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பின்தொடர்பவர்கள் பெற்றதாகக் கூறப்பட்டது. வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, கல்வி முறை, அரசியல் அமைப்பின் மீது இருக்கும் அதிருப்தி போன்ற பிரச்சினைகளை முன்வைத்து, ஜென் Z தலைமுறையின் குரலாக தங்களை நிலைநிறுத்த முயன்றது. இதனால் பலர் இதை இளைஞர்களின் புதிய அரசியல் வெளிப்பாடாகவும் பார்த்தனர்.

ஆனால் அந்த அபாரமான டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பல்வேறு சந்தேகங்களும் எழுந்தன. குறிப்பாக, பின்தொடர்பவர்களில் கனிசமானோர் போலி கணக்குகள் அல்லது 'பாட்'களாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவின. இணையத்தில் கிடைக்கும் ஆதரவு, தரையில் நடைபெறும் அரசியல் செயல்பாடுகளாக மாறுமா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில், 'சலோ பார்லிமென்ட்' என்ற பெயரில் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு இந்த இயக்கம் அழைப்பு விடுத்தது. டெல்லியில் நடைபெற்ற அந்த போராட்டத்தின் போது, ​​போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. போலீசார் தடியடி நடத்தி பலரை கைது செய்ததாகவும், மறுபுறம் போராட்டக்காரர்கள் மீது பலம் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதால், உண்மை நிலை குறித்து விவாதம் தொடர்கிறது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஜென் Z இயக்கத்தின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டன. காட்சிகள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி, இந்த இயக்கம் தீவிர அரசியல் முயற்சியாக இல்லாமல், கிண்டலுக்கும் மீம்களுக்கும் உள்ளடக்கமாக மாறிவிட்டதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் உண்மையான கோரிக்கைகள் பின்தள்ளப்பட்டு, கவனத்தை ஈர்க்கும் செயல்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்த சூழலில், கல்வி சீர்திருத்தம் மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் தேசிய கவனத்தை ஈர்த்தது. கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் நீண்ட நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தை அணுகினர்.

வாங்குசுகின் தற்போதைய போராட்டம், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுடன் நல்லுறவுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருடன் அவர் நடத்திய ஆலோசனைகள் அப்போது பாராட்டப்பட்டன. ஆனால் தற்போது அதே அமைச்சரின் ராஜினாமாவை கோரி போராட்டத்தில் ஈடுபடுவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனுடன், வாங்குசுக்கின் அமைப்பின் வெளிநாட்டு நிதி தொடர்பான விவகாரங்களும் மீண்டும் பேசப்பட்டன. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை விதிமுறைகள் மீறப்பட்டதாக மத்திய அரசு முன்பு குற்றம்சாட்டி, அவரது அமைப்பின் FCRA உரிமத்தை ரத்து செய்தது. அந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து, தன்னை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையாக கருதப்படுகின்றனர். இணையம், ஸ்மார்ட்போன், சமூக வலைதளங்களுடன் வளர்ந்த முதல் தலைமுறையாக இருப்பதால், தொழில்நுட்பத்தை அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பருவநிலை மாற்றம், சமத்துவம், மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்வது இவர்களின் முக்கிய பண்பாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், மன அழுத்தம், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, உடனடி வெற்றிக்கான எதிர்பார்ப்பு, சமூக வலைதள அங்கீகாரத்தின் மீதான ஈர்ப்பு போன்ற சவால்களையும் இந்த தலைமுறை எதிர்கொள்கிறது. அதனால், டிஜிட்டல் இயக்கங்கள் உண்மையான சமூக மாற்றத்தை உருவாக்குமா அல்லது குறுகிய கால டிரெண்டாகவே முடிவடையுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது.

கரப்பன்பூச்சி ஜனதா கட்சி போன்ற முயற்சிகள், இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாக சிலரால் பார்க்கப்படுகின்றன. அதேசமயம், அதன் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதளங்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை காரணமாக, ஜென் Z தலைமுறையின் தீவிரமான அரசியல் குரலை பலவீனப்படுத்தும் அபாயமும் இருப்பதாக மற்றொரு தரப்பு கருதுகிறது.

முடிவாகப் பார்க்கும்போது, ​​வேலைவாய்ப்பு, கல்வி சீர்திருத்தம், அரசியல் பொறுப்புணர்வு போன்ற முக்கிய கேள்விகளை இளைஞர்கள் முன்வைப்பது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறிதான். ஆனால் அந்த கோரிக்கைகள் நீண்டகால இருந்து வருகிறது. இது இயக்கமாக வளர வேண்டுமெனில், சமூக வலைதள வைரல்களைத் தாண்டி தெளிவான நோக்கம், பொறுப்பான தலைமையின்மை, அமைப்புரீதியான செயல்பாடு ஆகியவை அவசியம். இல்லையெனில், ஒரு தீவிரமான இயக்கம் கூட, காலப்போக்கில் வெறும் இணைய நையாண்டியாக மட்டுமே நினைவில் நிற்கும் அபாயம் உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு, மும்பை, சென்னை இல்லை! இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி.. காங்கிரஸ் பெரும் போராட்டம்.. குலுங்கிய டெல்லி!