பசு வதை தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில் முக்கிய உத்தரவு

Published : Jul 13, 2026, 02:07 PM IST
Supreme Court

சுருக்கம்

தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த முழுமையான தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சட்டப்பூர்வ இறைச்சிக் கூடங்களையும் பாதிக்கும் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த முழுமையான தடைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டை ஏற்று இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு என்ன வாதிட்டது?

பொது இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் எல்லையைத் தாண்டி, சென்னை உயர் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைக்க முழுமையான தடை விதித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு சட்டப்படி இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களையும் பாதிப்பதாக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சட்டங்களை சுட்டிக்காட்டிய அரசு

1958-ஆம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1998-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 2023-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை விலங்குகள் வதையை ஒழுங்குபடுத்துகின்றனவே தவிர, முழுமையான தடை விதிப்பதில்லை என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்க வேண்டும் என்று கோரியது.

வழக்கின் பின்னணி

இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சூர்ய பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த மே 27 ஆம் தேதி, பக்ரீத் பண்டிகை எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்னங்களை வதைக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஜூலை 1 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அடுத்தகட்டம் என்ன?

தற்போது உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை மட்டுமே வழங்கியுள்ளது. வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பான சட்டபூர்வமான இறுதி முடிவு, உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: இனி வீட்டுக்கு கரண்ட் பில் Free.! செலவுக்கும் ரூ.78 ஆயிரம் கிடைக்கும்.! எப்படி தெரியுமா?
Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வந்தாச்சு! எந்த ரூட்டில் இயக்கம்? என்னென்ன சிறப்பம்சம்?