
CJP protest Congress: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக்கூறி தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். டெல்லி காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் இன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சினருக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியும் இன்று களமிறங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால், பவன் கேரா என முக்கிய தலைவர்கள் அனைவரும் லோக் கல்யாண் மார்க் பகுதியில் கூடினர். பிரதமர் நரேந்திர மோடியும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் எழுந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: Indian Railways: ரயில்ல பெட்ஷீட் திருடுனா என்ன ஆகும் தெரியுமா? ஆசைப்பட்டா ஜெயில்தான்!
முன்னதாக மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட 'தடியடி' பிரச்சினையை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது X பக்கத்தில், "நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு பிரதமரிடம் இருந்து பதில்களைப் பெறுவதற்காக நாங்கள் அவரது வீட்டை நோக்கி பேரணியாகச் செல்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
"அரசாங்கம் எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கவும் தயாராக இல்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் போலீஸ் தடியடியில் காயமடைந்த மாணவர்களை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் சந்தித்துப் பேசினர். "நாட்டின் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. NEET வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராடும் மாணவர்களின் நேரடியான கோரிக்கை என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தனது X பக்கத்தில், "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் நேற்றைய இளைஞர் போராட்டத்தில் போலீசாரின் மிருகத்தனமான தடியடியில் காயமடைந்த மாணவர்களை சந்தித்தனர். இன்று, நாட்டில் மாணவர்களின் எதிர்காலம் நசுக்கப்படுகிறது, குரல் கொடுப்பவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. இதற்காக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். வினாத்தாள் கசிவுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே மாணவர்களின் தெளிவான கோரிக்கை" என்று பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பசு வதை தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில் முக்கிய உத்தரவு
மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை
நேற்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துப் பேசினார். அவர்கள் அரசாங்கத்திடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு நட்டா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இன்று காலைதான், போராட்டக்காரர்களிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை முதல்முறையாக வந்தது" என்று குறிப்பிட்டார்.
காலை 11:50 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சந்திப்பு சுமூகமான முறையில் நடந்தது. முதலில் வாய்மொழியாக விரிவான விவாதம் நடந்தது, மாலை 4 மணியளவில் எழுத்துப்பூர்வமான மனு என்னிடம் கொடுக்கப்பட்டது. அனைத்து போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, இயல்பு நிலையை மீட்டெடுக்க நிர்வாகத்திற்கு உதவ வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன்'' என்றார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் விதித்த 3 நிபந்தனைகள்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பின்னர் கூறுகையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் NEET தேர்வு காரணமாக "உயிரிழந்த 20-க்கும் மேற்பட்ட" மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை நட்டாவிடம் முன்வைத்ததாகத் தெரிவித்தார்.