அயோத்தி ராமர் கோயில் திறப்பு: சிறப்பு ரயில்கள் எங்கிருந்து இயக்கப்படும்?

By SG Balan  |  First Published Dec 19, 2023, 9:47 PM IST

டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, நாக்பூர், புனே போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வர உள்ளனர். பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே தயாராகி வருகிறது.

அயோத்திக்கு பக்தர்கள் செல்வதற்காக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே ஏபிஆர்ஓ விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். அதற்கான திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Latest Videos

undefined

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக ரயில்வே வாரிய தலைவர் ஜெய வர்மா சின்ஹா ​​மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் அயோத்தி ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்துடன் இணைந்து ரயில் நிலைய கட்டிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தின் முழுமையடையாத பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடைமேடைகள் மற்றும் இரட்டை ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள்  தீவிரமாக நடக்கின்றன.

நமோ ஆப்பில் தொடங்கப்பட்ட 'ஜன் மேன் சர்வே’: எம்.பி.க்கள் எப்படி வேலை செய்தார்கள்? - கருத்து கேட்கும் பிரதமர்!

தற்போது அயோத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கட்டுமானப் பணிகள் நடப்பதால் பெரும்பாலான ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அயோத்தி ரயில் நிலையத்தில் அமைதி நிலவுகிறது. கடந்த 15 நாட்களாக இதே நிலைதான் உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஜனவரி 15 வரை மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகுதான் வழக்கமான ரயில் தடத்தில் ரயில்கள் சீராக இயங்கும் எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, நாக்பூர், புனே போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தி ரயில் நிலையத்தில் பயணிகளின் அழுத்தத்தைக் குறைக்க, அயோத்தி கான்ட் மற்றும் தர்ஷன்நகர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

ரூ.350 கோடி செலவில் அயோத்தி ரயில் நிலையம் தயாராகிறது. ராமர் கோயிலை நினைவூட்டும் விதமாகக் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம் முழுக்க குளிரூட்டப்பட்டதாக இருக்கும். உணவகம், குழந்தைகள் பராமரிப்பு, லிப்ட், எஸ்கலேட்டர், குடிநீர், மருத்துவ வசதிகள், பிரம்மாண்டமான வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் மற்றும் பணியாளர்கள் தங்கும் வசதியும் அயோத்தி ரயில் நிலையத்தில் இருக்கும்.

சதம் அடித்த எம்.பி.க்கள் இடை நீக்கம்: அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம்!

click me!