
ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை விமர்சித்து, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது, ஆனால் இலவசங்களுக்கு மட்டும் பணம் உள்ளது என பாஜக செய்தித்தொடர்பாளர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை கடுமையாக சாடியுள்ளார்.
குறிப்பிட்ட சில மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கத் தவறியதை மேற்கோள் காட்டியுள்ள அவர், இலவச அரசியல் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதிப் பேரழிவின் விளிம்பில் தள்ளியுள்ளது என்று விமர்சித்துள்ளார். ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மோசமான நிதி நிர்வாகத்தின் எடுத்துக்காட்டுகளாக மாறியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
“ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில், திறமையற்ற மாநில அரசின் கஜானா காலியாக இருப்பதற்கான காரணத்தை கேள்வி எழுப்பி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில், 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது மே மாத சம்பளத்திற்காக காத்திருக்கின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் ஆந்திரப் பிரதேசத்தில், ஊழியர்கள் நம்பிக்கையிழக்கும் அளவுக்கு மாநில கஜானா வற்றிவிட்டது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில், மின்சாரத் துறை ஊழியர்கள் சம்பளம் தாமதமாவதால் விவரிக்க முடியாத அதிருப்தியில் உள்ளனர். பிஆர்எஸ் கட்சி ஆளும் தெலங்கானாவில், 3.5 லட்சம் தொழிலாளர்கள் மாதாந்திர ஊதியம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.” என முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞருக்கு அமெரிக்கா விருது!
தங்கள் இலவச அரசியலால் தாங்கள் ஆளும் மாநிலங்களை நிதி நெருக்கடியில் தள்ளுவதாக எதிர்க்கட்சிகளை சாடியுள்ள ராஜ்யவர்தன் ரத்தோர், ஒவ்வொரு அரசு ஊழியரும் அரசுகளுக்கு கட்டமைப்பின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களை நிதி நெருக்கடியில் தள்ளுவது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் நிதி பேரழிவின் அறிகுறியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சி விளம்பரங்கள் மற்றும் இலவச அரசியல் என்று வரும்போது மட்டும், இந்த அதிகார வெறி கொண்ட கட்சிகளுக்கு எப்படி போதுமான நிதி உள்ளது என்பது தெரியவில்லை. இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.