இலவச உணவு தானிய திட்டம் நிறுத்தம்… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 12:15 PM IST
Highlights

கொரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலவச உணவு தானியங்கள் விநியோகத் திட்டம் நவம்பருக்குப் பிறகு தொடராது என்று மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளாா்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதை அடுத்து ஏழை எளிய மக்களின் உணவுத்தேவையை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் முதல், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கி அந்த திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இலவச தானியம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரையில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று பரவல் குறையாததால் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு இறுதியாக நவம்பா் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்திருந்தது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளதாகவும் அந்த அளவுக்கு அரிசி, கோதுமையை வினியோகித்துள்ளதாகவும் எனவே, வருகிற 30 ஆம் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

சமையல் எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாகவும் அதன் காரணமாக, சந்தையில் சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளது என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாமாயில் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.18 வரை குறைந்துள்ளது என்றும் கடலை எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், சோயாபீன் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.11 வரையிலும், சூரியகாந்தி எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கான செலவு குறைந்து சமையல் எண்ணெய் விலை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக தெரிவித்தார். நாட்டின் 167 இடங்களில் சமையல் எண்ணெயின் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் சமையல் எண்ணெய் விலையைக் குறைக்குமாறு தனியாா் நிறுவனங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறிய அவர், விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக சமையல் எண்ணெய் கையிருப்புக்கு சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றும் அவை தொடா்பாக அடுத்த வாரம் மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

click me!