மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுத் திணறல் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 79 வயதான அவர் முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்தது.
இதனிடையே, அவரது உடல்நிலை மோசமானதால் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம்: மேக் இன் இந்தியாவுக்கான முயற்சி - ஜெய்சங்கர்!
“புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஆக்ஸிஜன் செறிவு 70 சதவீதமாக மோசமடைந்ததால் சுயநினைவை இழந்துள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.” என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ஜோதிபாசுவின் 30 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர், கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதும், புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த 2015ஆம் ஆண்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார், அதன்பின்னர், 2018ஆம் ஆண்டில் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.