
சாமானிய மக்களும் விமானத்தில் பறக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட “உதான்”(UDAN)திட்டத்தில் உள்ள வழித்தடங்களை மத்தியஅரசு இன்று வெளியிட்டது.
இதில் 128 வழித்தடங்களில் 5 முக்கிய விமான நிறுவனங்கள் சேவையாற்ற இருக்கின்றன. உதான் திட்டத்தின்கீழ் ஒரு மணிநேரம் பயணம் தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே விமானத்தில் ரூ. 2500 கட்டணத்தில் பயணிக்க முடியும்.
உள்நாட்டு விமானப்போக்குவரத்தை வளர்க்க வேண்டும், சாமானிய மக்களுக்கும் விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வேண்டும், வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் உதான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும்.
லாபம் வரக்கூடிய வழித்தடங்களைக் கண்டறிந்து, அங்குள்ள மக்களுக்கு எளிதாக விமானச் சேவை கிடைக்கும் வகையில் உதான் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், திட்டத்தில் எந்ெதந்த நகரங்களுக்கு இடையே விமானப்போக்குவரத்து வைக்கலாம், எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இன்று அந்த முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
இதை சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இணை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ ஆகியோர் டெல்லியில் இன்று வெளியிட்டனர்.
அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், “ உதான் திட்டம் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வந்து, முதலீட்டையும், வேலைவாய்ப்பையும் பெருக்கும்” என்றார். மத்தியஅமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேசுகையில் “ ஏப்ரல் மாதத்தில் இருந்து உதான் திட்டத்தில் விமானங்கள் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும்” என்றார்.
1.உதான் திட்டப்படி 45 நகரங்களில் உள்ள விமானநிலைங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
2.ஸ்பைஸ் ஜெட், ஏர்டெக்கான், ஏர்இந்தியா, ஏர் ஒடிசா, டர்போ மெகா ஆகிய விமானநிறுவனங்கள் இந்த சேவையில் ஈடுபடுகின்றன.
3. ஒவ்வொரு விமானத்திலும் 50 சதவீத இடங்கள் உதான் திட்டத்தில் ரூ.2500 கட்டணத்தில் நிரப்பப்படும். இந்தபயணம் ஒரு மணிநேரத்துக்கு மிகாமல் இருக்கும்.
இந்த திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து விஜயவாடா, சென்னை, விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களுக்கும், பாண்டிச்சேரியில் இருந்து சென்னை, சேலம் ஆகிய நகரங்களுக்கும், மைசூர் முதல் சென்னை, நெய்வேலி முதல் சென்னை, சேலம் முதல் பெங்களூரு, சென்னை, ஹோசூர் முதல் சென்னை ஆகிய முக்கிய நகரங்களுக்குஇடையே விமானச் சேவை வருகின்றது.