
ஒரு பைக் வாங்கினால், இன்னொரு பைக் இலவசம் என்ற அதிரடியான, உச்சகட்ட அமர்க்கள ஆஃபரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசு, காற்றுமாசைக் குறைக்கும் வகையில், பாரத்ஸ்டேஜ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு மார்ச் 31-ந்தேதியோடு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் 8.24 லட்சம் இருசக்கர, நான்கு சக்கர, 3 சக்கரவாகனங்கள் தேக்கமடையும் என்று வாதிட்டும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து, தங்களிடம் இருக்கின்றன ஸ்டாக்குகளை விற்றுத் தீர்க்கும் வகையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போட்டிபோட்டு ஸ்டாக்குகளை விற்றுதீர்க்க வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான ஆஃபர்களை அறிவித்து பைக், ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன
ஏற்கனவே டி.வி.எஸ். ஹீரோ, பஜாஜ், ஹோண்டா நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை இரு சக்கர வாகனங்களுக்கு விலையில் தள்ளுபடி அறிவித்துவிட்டன. இதனால், நேற்றுமுதல் ஆட்டமொபைல் ஷோரூம்களில் மக்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது.
இந்நிலையில், உச்ச கட்ட ஆஃபரை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவாது, ஒரு பைக் வாங்கினால், ஒரு பைக்கை இலவசமாக ஓட்டிச் செல்லலாம் என்ற அறிவிப்பு மக்களிடையே மிகப்பெரிய “அதகளத்தை” உண்டாக்கி இருக்கிறது.
அதாவது, இந்த ஆஃபர் அனைத்து ஹோண்டா இருசக்கரவாகனங்களுக்கும் கிடையாது. ஹோண்டா சி.பி.ஆர்.150ஆர் அல்லது சி.பி.ஆர்.250ஆர், மாடல்களில் பிஎஸ்.3எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தால் மட்டுமே ஆஃபர் செல்லுபடியாகும்.
இந்த பைக்கின் விலை ஷோரும் விலை ரூ.1.22 லட்சம் முதல் 1.80 லட்சம் வரையாகும். இந்த பைக்கை வாங்குவோருக்கு ஹோண்டா நிறுவனத்தின் “நவி” பைக்கை இலவசமாக ஓட்டிச் செல்லலாம்.
இந்த அதிரடி இலவசம், விலைத்தள்ளுபடி என்பது இன்று ஒரு நாள் மட்டுமே. நாளை முதல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமலுக்கு வந்துவிடும் என்பதால், இன்று இரவுக்குள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஹோண்டா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.