ஐந்து மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை!

By Manikanda Prabu  |  First Published Nov 1, 2023, 4:57 PM IST

ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது


மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானின் நவம்பர் 25ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Latest Videos

undefined

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஐந்த மாநில தேர்தலை கருத்தில் கொண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பரிசு!

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, இந்தத் தடை நவம்பர் 7ஆம் தேதி காலை 7 மணி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 6:30 மணி வரை அமலில் இருக்கும். தேர்தல் சட்டத்தின் விதிகளை மேற்கோள் காட்டி, இந்தப் பிரிவின் விதிகளை மீறும் எந்தவொரு நபருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகளை நடத்துவது, வெளியிடுவது அல்லது விளம்பரப்படுத்துவது அல்லது வேறு எந்த வகையிலும் பரப்புவது என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது ஐந்து மாநில பொதுத்தேர்தல் மற்றும் நாகாலாந்து மாநில இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

click me!