யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிக்க நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் கோழிக்கோடு, குவாலியர் ஆகிய நகரங்கள் இணைந்துள்ளன
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவால் இலக்கியம் மற்றும் இசையின் படைப்பாற்றல் மிக்க நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மதிப்புமிக்க UNESCO Creative Cities Networkஇல் இணைந்த 55 புதிய நகரங்களில் இந்தியாவின் இந்த இரண்டு நகரங்களும் அடங்கும்.
UNESCO Creative Cities Networkஇல் 55 புதிய நகரங்கள் இணைந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள இந்த நகரங்கள் அவற்றின் கலாசாரம், படைப்பாற்றல் மற்றும் புதுமையான நகர்ப்புற மேம்பாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்காக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
கேரள இலக்கிய விழா மற்றும் பல புத்தகத் திருவிழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமான கோழிக்கோடு, யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கால் ‘இலக்கிய நகரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. யுனெஸ்கோவால் இலக்கிய நகரம் என அங்கீகரிக்கப்படட் முதல் நகரம் என்ற பெருமையை கோழிக்கோடு பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், யுனெஸ்கோவால் ‘இசையின் நகரம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இசைக்கலைஞர் தான்சனை உருவாக்கிய நகரத்திற்கும், சிந்தியா கரானா பல நூற்றாண்டுகளாக இசையைப் பாதுகாத்து பிரச்சாரம் செய்த நகரமுமான குவாலியருக்கு இது பொருத்தமான பெயராக அமைந்துள்ளது என பெருமிதம் கொள்ளப்படுகிறது.
குவாலியரின் இசை பாரம்பரியம் செழுமையானது. பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசை, நாட்டுப்புற இசை மற்றும் பக்தி இசை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த நகரம் பல புகழ்பெற்ற இசை நிறுவனங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு தாயகமாகவும் உள்ளது.
யுனெஸ்கோ புதிய 55 நகரங்களின் முழுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் புகாரா (கைவினைகள் மற்றும் நாட்டுப்புறக் கலை), காசாபிளாங்கா (ஊடகக் கலைகள்), சோங்கிங் (வடிவமைப்பு), காத்மாண்டு (திரைப்படம்), ரியோ டி ஜெனிரோ (இலக்கியம்) மற்றும் உலான்பாதர் (கைவினைகள் மற்றும் நாட்டுப்புற கலை) உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலை., பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி!
ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உலக நகரங்கள் தினம் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த அறிவிப்பை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. “எங்கள் கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கில் உள்ள நகரங்கள் கலாச்சாரத்திற்கான அணுகலை மேம்படுத்துவதிலும், நகர்ப்புற நெகிழ்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் முன்னணியில் உள்ளன” என்று யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே தெரிவித்துள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்கள் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை போர்ச்சுகலில் நடைபெறவுள்ள யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் வருடாந்திர கூட்டத்திற்கு அழைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.