சுந்தர் பிச்சைக்கு நேற்று விருது; இன்று FIR… என்ன கொடுமை சார் இது?

By Narendran SFirst Published Jan 26, 2022, 11:07 PM IST
Highlights

கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை மீது காப்புரிமை விதிகளை மீறியதாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை மீது காப்புரிமை விதிகளை மீறியதாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பாலிவுட் இயக்குநர் சுனில் தர்சன் என்பவர் Ek Haseena Thi Ek Deewana Tha என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மர்ம நபர்கள் சட்டவிரோதமாக யூடியூபில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. ஆனால், இதன் காப்புரிமையை இயக்குநர் சுனில் யாருக்கும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், சட்ட விரோதமாக படம் யுடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மும்பை நீதிமன்றத்தில் சுனில் தர்சன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காப்புரிமைச் சட்ட விதிகளை மீறியதாக கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை மற்றும் அந்த நிறுவனத்தின் 5 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, மும்பை அந்தேரி எம்.ஐ.டி.சி போலீஸார் சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் 5 பேர் மீது காப்புரிமை சட்டவிதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து படத்தின் இயக்குநர் சுனில் கூறுகையில், எனது படத்தின் காப்புரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. யூடியூபுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். ஆனால், யூடியூபிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. எனது படத்தை யாரோ யூடியூபில் என் அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்துவிட்டனர். யூடியூபும், அதை பதிவேற்றம் செய்தவர்களும் அதன் மூலம் சம்பாதிக்கின்றனர். இது தொடர்பாக பல முறை புகார் செய்துவிட்டேன். ஆனால், எந்த வித பதிலும் இல்லை. எனவேதான் இறுதியாக கோர்ட்டை அணுகியிருக்கிறேன். மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது என்று தெரிவித்தார். நேற்று சுந்தர்பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!