அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலுயுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் இதர விவசாயிகள் குழுக்கள் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பஞ்சாப் ஹரியானாவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினர். ஆனால் அவர்களை ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
இதனிடையே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு கடந்த 8, 12, 15 ஆகிய தேதிகளில் 3- கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கக் குழுவிற்கும் இடையிலான 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முன்மொழிவில் விவசாயிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டாலும், தங்களின் மற்ற கோரிக்கைகள் மீதான முடிவு நிலுவையில் உள்ள நிலையில், தங்கள் மன்றங்களில் இந்த திட்டத்தை விவாதிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர்.
அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாயிகளை சந்தித்த திரு கோயல், உத்தேச கொள்முதலுக்காக விவசாயிகளுடன் அரசு நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யும் என்றும், கொள்முதல் அளவுக்கு வரம்பு இருக்காது என்றும் கூறினார். கூட்டுறவு சங்கங்கள் NCCF (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் NAFED (இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு அல்லது மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யும்.” என்று பியூஷ் கோயல் கூறினார்.
விவசாயிகளின் தலைவரான சர்வான் சிங் பந்தேர் இதுகுறித்து பேசிய போது” அரசின் முன்மொழிவை அடுத்து, 'டெல்லி சலோ' பேரணியை தற்காலிகமாக நிறுத்த விவசாயிகள் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். புதிய MSP திட்டத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்ய எங்களுக்கு அவகாசம் தேவை. பிப்ரவரி 19-20 தேதிகளில் எங்கள் மன்றங்களில் விவாதித்து இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தை எடுத்து அதன்படி முடிவு எடுப்போம்.” என்று தெரிவித்தார்.
கடன் தள்ளுபடி மற்றும் பிற கோரிக்கைகள் மீதான விவாதம் நிலுவையில் உள்ளது என்று கூறிய அவர் "அடுத்த இரண்டு நாட்களில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,, 'டெல்லி சலோ' அணிவகுப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படாவிட்டால் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும்.” என்று கூறினார்.
குறைந்த பட்ச ஆதாரவிலை தவிர விவசாயிகள் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் போராட்டத்தின் போது அவர்கள் மீது போடப்பட்ட போலீஸ் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு தங்கள் அணிவகுப்பைத் தொடங்கிய நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைகளில் முகாமிட்டுள்ளனர், விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லி காஜிபூர், சிங்கு மற்றும் பிற எல்லைகள் பகுதியளவு சீல் வைக்கப்பட்டுள்ளது. தங்கள் டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகள் கடந்து செல்வதைத் தடுக்க, கான்கிரீட் தொகுதிகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.