
உத்தரப் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.4 ஆக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர். கிலோவுக்கு ரூ.10 ஆவது நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கோரிய விவசாயிகள், உருளைக்கிழங்குகளை முதல்வர் யோகியின் வீட்டின் முன் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருளைக்கிழங்குக்கு உரிய விலையை அரசு நிர்ணயிக்கவில்லை என்று விவசாயிகள் ஆத்திரத்தில் இருந்தனர். இதில் தாங்கள் விளைவித்த உருளைக்கிழங்குகளை லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை வளாகம், முதல்வர் யோகியின் வீடு, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் ஆகியவற்றின் அருகே உள்ள சாலைகளில் கொட்டி, போராட்டம் நடத்தினர். ஆச்சரியப் படும் விதத்தில், போலீஸாருக்கோ, உளவுத்துறைக்கோ, பாதுகாப்புப் படையினருக்கோ விவசாயிகள் இப்படி போராட்டத்தில் ஈடுபடப் போவது எதுவும் தெரியாதாம்!
உருளைக்கிழங்குகளைப் பாதுகாப்பாக வைக்க பயன்படும் குளிர்பதனக் கிடங்குகளில், அவற்றின் உரிமையாளர்கள் வாடகையாக அதிகப் பணம் கேட்கிறார்கள்; அவற்றை தங்களால் கட்ட முடியாது என்று கூறிய அவர்கள், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகக் கூறி கலந்து சென்றனர்.
இன்று ராஷ்டிரீய லோக்தளம் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது. இருப்பினும், அரசு வரும் ஜன.18ம் தேதி ஆக்ராவில் விவசாயிகள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு உள்ள பிரச்னைகளை சரி செய்யவும், அரசுத் தரப்பு நடவடிக்கை எடுக்க வசதியாக குறை தீர் கூட்டம் நடத்தவும் முன்னரே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், லக்னோ எஸ்.எஸ்.பி தீபக் குமார் இது குறித்து தெரிவிக்கையில், சாலையில் உருளைக்கிழங்கைக் கொட்டியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.