
தனது விருப்பத்துக்கு மாறாக, தன்னைக் கடத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரு பெண்ணுக்கு தாலி கட்ட வைத்ததாக ஒருவர் கொடுத்த புகாரும், தொடர்ந்து வெளிவந்த வீடியோ பதிவுகளும் பீகரில் மட்டுமல்லாது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு பீகாரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் வினோத் குமார், பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரைக் கடத்திய பெண் வீட்டார் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வைத்ததாக வினோத் குமாரின் வீட்டார் புகார் தெரிவித்துள்ளனர்.
பொகரோ ஸ்டீல் பிளாண்டில் எஞ்சினியராகப் பணியாற்றும் வினோத் குமார், தனது நண்பர் ஒருவரின் திருமணத்துக்காகச் சென்றுள்ளார். அப்போது, அவரைக் கண்ட ஒருவர், துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை கடத்தியுள்ளனர். பின் அவரை மிரட்டி, பெண் ஒருவர் அருகில் அமர்ந்திருக்க, திருமணச் சடங்குகளைச் செய்ய வைத்துள்ளனர். வினோத் குமார், தன்னை விட்டு விடும்படி கதறி அழுதுள்ளார். ஆனால், அவர் கண்களில் திரண்ட கண்ணீரை முகமூடி அணிந்த ஒருவர் துடைத்து விட்டு, அவரை சமாதானம் செய்துள்ளார். பின்னால் இருந்தவர் அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணுக்கு தாலி கட்ட வைத்துள்ளனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோவை 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அப்போது ஒருவர் அவரிடம் கூறுகிறார்.... “நாங்கள் உனக்குத் திருமணம் தான் செய்து வைக்கிறோம்... உன்னை ஒன்றும் தூக்கில் தொங்க விடவில்லை” என்கிறார்.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி மனு மகாராஜ் கூறியபோது, வினோத் குமார் குடும்பத்தாரிடம் இருந்து முறையான புகாரைப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார் வினோத் குமார். அப்போது, அவரைக் கண்ட அந்தப் பெண்ணின் அண்ணன் சுரேந்திர யாதவ் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வினோத்தைக் கடத்தியுள்ளார். பின்னர் அவரை வற்புறுத்தி தன் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால், டிச.3ம் தேதி, தனது நண்பரின் திருமணத்துக்குச் சென்றிருந்த வினோத் குமார் குறித்த நேரத்தில் வீடு திரும்பாததால், கலவரமடைந்துள்ளார் அவரது சகோதரர் சஞ்சய் குமார். அப்போது அவருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் வினோத் குமாருக்கு திருமணம் நடந்த செய்தி சொல்லப் பட்டிருக்கிறது. இதை அடுத்து அவர் உடனே காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, புகார் அளித்துள்ளார். அதே நேரம், திருமணம் முடிந்த பின்னர், பீகார் மகோமா மாவட்டத்தில் இருந்து வினோத்தை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அதே நேரம், இது குறித்து காவல் துறையில் புகார் ஏதும் கொடுக்கக் கூடாது என்றும், பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ளுமாறும் வினோத் குடும்பத்தை அவர்கள் மிரட்டியுள்ளனராம்.
பொதுவாக, பெண்ணைத்தான் கடத்தி, திருமணம் செய்து வைப்பதைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், மேற்கு பீகார், கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஆண்களை துப்பாக்கி முனையில் கடத்தி, திருமணங்கள் செய்வது வழக்கமாக உள்ளது. வரதட்சிணை கொடுக்க இயலாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், இது போல் துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைக்கிறார்களாம்.
இது போல் செய்யப்பட்டதாக, கடந்த 2016ல் மட்டும் 3000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது குறித்த புள்ளிவிவரத் தகவலின் படி, 2016ஆன் ஆண்டு மட்டும் 15 வயதுக்கு உட்பட்ட 18 சதவீதம் சிறுமிகள் இப்படி திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் 47 சதவீதம் இளம் பெண்கள் 18 வயது வரும்போதே திருமணம் செய்துவைக்கப் படுகின்றனராம்.