டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் சிலருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பண மோசடி வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமானதுல்லா கான் (49) டெல்லி ஓக்லா தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றவர். டெல்லி வக்ஃப் வாரியத் தலைவராகவும் அவர் உள்ளார்.
டெல்லி வக்ஃப் வாரியத்தில் சட்டவிரோத நியமனங்கள் மூலம் அமானதுல்லா கான் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட டெல்லி லஞ்ச ஒழிப்பு துறை எஃப்ஐஆர் மற்றும் எஃப்ஐஆர் ஆகியவற்றின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர். அதன் முடிவில், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.