சத்தீஸ்கர் தேர்தல்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Oct 12, 2023, 5:52 PM IST

சத்தீஸ்கர் மாநில தேர்தலையொட்டி, மாவட்ட ஆட்சியர்கள், உயர் காவல் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது


சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் இரண்டு பேர், மாவட்ட காவல்துறை தலைவர்கள் 3 பேர் உட்பட 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய சத்தீஸ்கர் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், அவர்களுக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இன்று மாலைக்குள் காலியாக உள்ள எட்டு பணியிடங்களுக்கும் தலா மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அம்மாநில தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதன் தொடர்ச்சியாக, ராய்கர் மாவட்ட ஆட்சியர் தரண் பிரகாஷ் சின்ஹா மற்றும் பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஜா ஆகியோர் தலைமை செயலக இணை செயலாளர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ராஜ்நந்த்கான் எஸ்பி அபிஷேக் மீனாவை இடமாற்றம் செய்து மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்தது. கோர்பா எஸ்பி உதய் கிரண் மற்றும் துர்க் எஸ்பி ஷலப் சின்ஹா போலீஸ் தலைமையகத்திற்கும், பிலாஸ்பூர் கூடுதல் எஸ்பி அபிஷேக் மகேஸ்வரி மற்றும் துர்க் கூடுதல் எஸ்பி சஞ்சய் துருவ் ஆகியோர் போலீஸ் தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் ஜெனரலாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் ஏற்கனவே பணியில் இருந்த மாவட்டங்களில் பல முக்கிய தொகுதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

உணவு மற்றும் சிவில் சப்ளைகளுக்கான சிறப்பு செயலாளராக இருந்த 1995ஆம் ஆண்டு பேட்ச் இந்திய டெலிகாம் சர்வீஸ் அதிகாரி மனோஜ் சோனியும் நீக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளின் சத்தீஸ்கர் பயணத்தின்போது, கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக இதுகுறித்த விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!