அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

By Manikanda Prabu  |  First Published Mar 17, 2024, 4:37 PM IST

அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக vs காங்கிரஸ்: தேர்தல் வரலாற்றில் வளர்ச்சியும், வீழ்ச்சியும்..!

Tap to resize

Latest Videos

அதேபோல், மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி ஆந்திராவில் 175பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதியும், ஒடிசாவின் 147 தொகுதிகளுக்கு மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாகவும், அருணாச்சல பிரதேசத்தின் 60 தொகுதிகளுக்கும், சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு, கர்நாடகா, பிஹார், குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள்ளாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதி என வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

click me!