கேரளா மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. விஷம் கலந்த உணவு தான் காரணமா?

By Kevin KaarkiFirst Published Jun 5, 2022, 12:26 PM IST
Highlights

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட, 575 பேர் தங்களது மதிய உணவை பள்ளியில் சாப்பிட்டனர். இதுவரை எட்டு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தை அடுத்த கமயங்குலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் எட்டு மாணவர்கள் நேற்று (சனிக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கெட்டுப் போன உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

“சில மாணவர்கள் வெள்ளிக் கிழமை மாலை வேளையிலும், சில மாணவர்கள் சனிக் கிழமை காலையிலும் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்,” என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 

எட்டு பேருக்கு பாதிப்பு:

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 575 பேர் வெள்ளிக் கிழமை மதியம் மதிய உணவை உட்கொண்டனர். “பள்ளியில் மொத்தம் 650 மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட, 575 பேர் தங்களது மதிய உணவை பள்ளியில் சாப்பிட்டனர். இதுவரை எட்டு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

அங்கன்வாடி:

இதே போன்று கேரளா மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தை அடுத்த கொட்டாரக்கரா பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் நான்கு பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மாணவர்களின் உடல்நலம் சீராக இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இரு சம்பவங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு கேரளா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தவிட்டுள்ளார். 

“உணவில் விஷத்தன்மை பள்ளியில் நடைபெற்றதா அல்லது வெளியில் நடைபெற்றதா என்பதை நாம் கண்டறிய வேண்டும். மேலும் உள்ளூர் சந்தைகளில் வாங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமுள்ளதாக இருக்கிறதா என்பதையும் உறுதிப் படுத்த வேண்டும்,” என்று உணவு பாதுகாப்புத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

click me!