முகமது நபி குறித்த சர்ச்சை கருத்தால் வெடித்த வன்முறை.. 1500 பேர் மீது வழக்குப் பதிவு..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 05, 2022, 10:20 AM IST
முகமது நபி குறித்த சர்ச்சை கருத்தால் வெடித்த வன்முறை.. 1500 பேர் மீது வழக்குப் பதிவு..!

சுருக்கம்

வன்முறை வெடித்ததை அடுத்து அந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கும் பதற்றம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

கான்பூர் வன்முறை விவகாரத்தில் 36 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முகமது நபி குறித்து சர்ச்சைக் குரிய கருத்தை தெரிவித்த விவகாரம் தொடர்பாக உத்திர பிரதேச மாநிலத்தின் கான்புர் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. 

வன்முறையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சாபர் ஹயாத், கடைகளை மூடக் கோரி போஸ்டர்களை ஒட்டியதோடு, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஊர்வலம் செல்வதற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இதன் காரணமாகவே வன்முறை வெடித்தது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முதல் தகவல் அறிக்கை:

வன்முறையை தொடர்ந்து வீடியோ ஆதாரங்களை திரட்டிய காவல் துறையினர், குற்றவாளிகளை கைது செய்து வந்தனர். இந்த வன்முறையில் சுமார் 40 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது என காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

“வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்,” என காவல் துறை ஆணையர் விஜய் சிங் மீனா தெரிவித்து உள்ளார். 

வன்முறை வெடித்ததை அடுத்து அந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கும் பதற்றம் காரணமாக, சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

வன்முறை:

கான்பூரில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பிய இஸ்லாமியர்கள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் செல்ல முயன்றனர். அதன்படி தொழுகை முடித்து வெளியே வரும் போது கோஷங்களை எழுப்பிய படி வீதிகளில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் போது சந்தையில் திறக்கப்பட்டு இருந்த கடைகளை மூடவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இவர்களின் செயலுக்கு மற்றொரு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக இரு கும்பலிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் தாக்குதலில் முடிந்தது. இரு கும்பலை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இரு கும்பலிடையே ஏற்பட்ட மோதலின் போது, அதே இடத்தில் எட்டு முதல் பத்து காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!
இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!