ஆட்சியை கவிழ்க்க சதி.. முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!! கர்நாடக அரசியலில் வெடித்தது சர்ச்சை

By karthikeyan VFirst Published Aug 26, 2018, 12:09 PM IST
Highlights

கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, முதல்வராக பதவியேற்று செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், அண்மையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியிருப்பது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

கடந்த 24ம் தேதி கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக எனது அரசியல் எதிரிகள் தீவிரமாக பணியாற்றினர். மீண்டும் முதல்வராவேன் என்ற நம்பிக்கையில் இருந்ததால், பல முக்கிய திட்டங்களை மீண்டும் முதல்வரான பிறகு அமல்படுத்தலாம் என்றிருந்தேன். தோல்விகளுக்கு நான் அஞ்சியதில்லை. மக்கள் ஆசீர்வதித்தால் மீண்டும் முதல்வராவேன் என்று கூறினார். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், சித்தராமையாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள முதல்வர் குமாரசாமி, எனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சி செய்துவருகிறார்கள். புதிய முதல்வர் செப்டம்பரில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எனது பதவியை காப்பாற்றிக்கொள்ள நான் முயற்சி செய்யவில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சித்தராமையாவின் சர்ச்சை பேச்சும், அதற்கு குமாரசாமியின் பதிலடியும் என கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 


 

click me!