
பிரசாரத்தின்போது, ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட புகாரில், மத்திய பிரதேச மாநில மூத்த அமைச்சர் ஒருவரின் பதவியை பறித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் இனிமேல் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
செய்திக்குப் பணம்
அவருடைய அமைச்சரவையில், 2-வது இடத்தில் உள்ள மூத்த அமைச்சர், நரோட்டம் மிஸ்ரா. இவர் கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தாதியா தொகுதியில் போட்டியிட்டு ெவற்றி பெற்றார்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது நரோட்டம் மிஸ்ரா பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டதாக, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜேந்திர பார்தி என்பவர் புகார் கொடுத்தார்.
பதவி பறிப்பு
அதன் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், மிஸ்ராவுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இதன் மூலம் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்படுகிறது. அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.
பின்னடைவு
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர் மிஸ்ரா பதவி பறிக்கப்பட்டு இருப்பது சவுகான் தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கிடையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நிருபர்களிடம் தெரிவித்தார்.