
Delhi And Haryana earthquake : சமீப நாட்களாக உலகத்தின் பல்வேறு இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கால நிலை மாற்றம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தோனேசியா, ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் தொடரும் நில அதிர்வு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அவ்வப்போது ஒரு சில இடங்களில் மிதமான நில அதிர்வு உணர்ப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று உணர்ப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ஹரியானாவின் குராவாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.4 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில், 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வு சுமார் 15 வினாடிகள் நீடித்துள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில், காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு வீடுகளில் இருந்து மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் அசைய தொடங்கியது. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களும் கிழே விழுந்தது. இதனால் அலறிய மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தொடங்கினர்.
இதே போல ஹரியானாவின் குருகிராம், ரோஹ்தக், தாத்ரி மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட் மற்றும் ஷாம்லி வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.