வெடிபொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயங்கரவாதிகள்! FATF அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Published : Jul 09, 2025, 07:26 PM ISTUpdated : Jul 09, 2025, 08:40 PM IST
FATF

சுருக்கம்

பயங்கரவாத நிதி திரட்டுதல் முறைகள் டிஜிட்டல் மயமாகி வருவதாகவும், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நிதி திரட்டப்படுவதாகவும் FATF எச்சரிக்கிறது. புல்வாமா மற்றும் கோரக்நாத் தாக்குதல்கள் உட்பட பல சம்பவங்களை மேற்கோள் காட்டி விளக்குகிறது.

பயங்கரவாத நிதி திரட்டுதல் முறைகள் மாறிவிட்டதாகவும், முன்பு ரகசிய கூரியர்கள் மற்றும் ஹவாலா நெட்வொர்க்குகளைச் சார்ந்திருந்த நிலை மாறி, தற்போது லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நிதி திரட்டப்படுகிறது என்றும் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாத நிதிக் கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இந்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத நிதியுதவி அபாயங்கள் குறித்த இந்த அறிக்கையை FATF செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பயங்கரவாத குழுக்கள் தங்கள் தாக்குதல்களுக்கு நிதியளிக்கவும், திட்டமிடவும், செயல்படுத்தவும் இ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் சந்தைகள் மற்றும் ஃபிண்டெக் சேவைகள் போன்ற அன்றாட டிஜிட்டல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.

இந்தியாவில் நடந்த 2019 புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல், 2022 கோரக்நாத் கோவில் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கோள் காட்டி, பயங்கரவாதிகளால் டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

புல்வாமா தாக்குதல்

இந்திய மண்ணில் அண்மைய வரலாற்றில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். எஃப்ஏடிஎஃப் அறிக்கையின்படி, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளின் தாக்கத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்ட அலுமினியம் பவுடர், அமேசான் இ-காமர்ஸ் தளம் மூலம் பயங்கரவாதிகளால் வாங்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாத வலைப்பின்னல்கள் ஆன்லைன் வணிக சூழல்களில் எவ்வாறு தடையின்றி கலந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது.

"வர்த்தகம் சார்ந்த பணமோசடி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, நிதியை நகர்த்த EPOMகள் (E-commerce Platforms and Online Marketplaces) பயன்படுத்தப்படலாம். வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்கள் உண்மையில் ஒரு கூட்டாளியிடமிருந்து மற்றொரு வலைப்பின்னல் உறுப்பினருக்கு மதிப்பு மாற்றப்படுவதை மறைக்க முடியும். இத்தகைய திட்டத்தில், முதல் நபர் பொருட்களை வாங்கி, ஒரு EPOM மூலம் தனது கூட்டாளிக்கு அனுப்புவார், பிந்தையவர் மற்றொரு அதிகார வரம்பில் பொருட்களை விற்று, பயங்கரவாதத்திற்கு நிதியளிக்க லாபத்தைப் பயன்படுத்துவார்," என்று FATF குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொடர்பு

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அதிகாரிகள் ஏழு வெளிநாட்டினர் உட்பட 19 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் வாகனங்கள் மற்றும் பயங்கரவாத மறைவிடங்கள் உட்பட பல அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. இது இந்தத் தாக்குதல் ஒரு பெரிய நெட்வொர்க்கின் ஆதரவுன்ன் நடத்திருப்பதை உறுதிசெய்தது.

இத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் சித்தாந்த மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு புகலிடத்தையும் அளிக்கிறது என்று இந்தியா மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. FATF தனது அறிக்கையில் பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் பயங்கரவாதத்திற்கு அரசு ஆதரவு அளிக்கும் போக்கு குறித்து எச்சரித்துள்ளது.

"பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சில அமைப்புகள் நிதி திரட்டும் ஒரு வழியாக அரசு ஆதரவைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். நேரடி நிதி உதவி, தளவாட மற்றும் பொருட்களை வழங்குவது, ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பல வகையான ஆதரவுகள் பதிவாகியுள்ளன," என்று அறிக்கை கூறியிருக்கிறது.

கோரக்நாத் கோவில் தாக்குதல்

இந்த அறிக்கை பெரிய அளவிலான பயங்கரவாத சதித்திட்டங்களுடன் நிற்கவில்லை. ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் VPNகளைப் பயன்படுத்தி கருத்தியல் ரீதியாக வன்முறையைத் தூண்டுவது குறித்தும் இந்த அறிக்கை விவரிக்கிறது. இந்த வகையில் தனிநபர் தாக்குதல் நடத்துபவர்களையும் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய ஒரு வழக்கு, உத்தரப்பிரதேசத்தில் 2022 இல் நடந்த கோரக்நாத் கோவில் மீதான தாக்குதல் ஆகும். அங்கு, இஸ்லாமிக் ஸ்டேட் (ISIL) சித்தாந்தத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு நபர், பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதற்காகச் சென்றுள்ளார்.

விரிவான நிதி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் PayPal மற்றும் சர்வதேச நிதி பரிவர்த்தனை வழிகளை பயன்படுத்தி ISIL-க்கு ஆதரவாக சுமார் ரூ. 6.69 லட்சம் (7,685 அமெரிக்க டாலர்) பயணத்தை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தனது டிஜிட்டல் தடயத்தை மறைக்க, அவர் VPN சேவைகளைப் பயன்படுத்தியதாகவும், VPNக்கான கட்டணங்கள் அவரது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் PayPal மூலம் 44 தனித்தனி சர்வதேச பரிவர்த்தனைகளை நடத்தியுள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ. 6,69,841 (7,736 அமெரிக்க டாலர்) ஆகும். இந்த பரிவர்த்தனைகள் காலப்போக்கில் மேற்கொள்ளப்பட்டு, ISIL ஆதரவாளர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர் அனுப்பிய நிதிக்குப் பதிலாக, PayPal மூலம் வெளிநாட்டு கணக்கிலிருந்து ரூ.10,323.35 (188 அமெரிக்க டாலர்) பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது PayPal செயலியும் அத்துடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் பதிவுகளும் நிதிப் பரிவர்த்தனையைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. விசாரணையின் எதிரொலியாக, குற்றம் சாட்டப்பட்டவரின் PayPal கணக்கு முடக்கப்பட்டது.

சட்டவிரோதமாக திரட்டிய பணம் வெளிநாடுகளில் உள்ள பல நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ISIL இன் ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிதி வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  இது எல்லை தாண்டிய பயங்கரவாத நிதி திரட்டுதலில் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஆயுதங்களாக மாறும் பேமெண்ட் தளங்கள்

பயங்கரவாத நிதியாளர்கள் டிஜிட்டல் உலகிற்கு எந்தளவுக்குத் தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர் என்பதை FATF அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. பரவலாக பயன்படுத்தப்படும் வங்கி பரிவர்த்தனை வழிகளில் இருந்து பேமெண்ட் செயலிகள், கிரிப்டோகரன்சி, பீர்-டு-பீர் (P2P) அமைப்புகள் வரை பல வழிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துவரை அறிக்கை காட்டுகிறது.

"கடந்த 10 ஆண்டுகளில் ஃபிண்டெக் நிறுவனங்களின் ஆன்லைன் கட்டண சேவைகளின் சலுகை கணிசமாக வளர்ந்ததால், பயங்கரவாதிகள் அந்த சேவைகளைத் பயன்படுத்துவது அனைத்து சூழல்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக இது நிதியைப் பெற பல வழிகளை வழங்குகிறது," என்று இந்த அறிக்கை கூறியது.

ஃபிண்டெக் செயலிகள் பெரும்பாலும் புனைப்பெயர்கள் அல்லது போலிக் கணக்குகள் மூலம் பரிமாற்றங்களை அனுமதிக்கின்றன. இதனால், பரிவர்த்தனைகள் குறித்த குறைவான தடயத்தையே கொண்டுள்ளன. "இந்த கட்டண சேவைகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு குறைந்த செலவில் விரைவான பணப் பரிமாற்ற தீர்வுகளை வழங்குகின்றன" என்றும் அறிக்கை விளக்குகிறது.

பொருட்கள் விற்பனை மூலம் நிதி திரட்டல்

பயங்கரவாதக் குழுக்கள் இப்போது புத்தகங்கள், இசை, ஆடைகள்  மூலம் தங்கள் சித்தாந்தங்களை மெதுவாகத் திணிக்க முயல்கின்றன. இவற்றை ஆன்லைன் வழிகள் மூலம் தங்கள் ஆதரவாளர்களுக்கு விற்கின்றன. இந்த நடைமுறை குறிப்பாக இனரீதியாகத் தூண்டப்பட்ட பயங்கரவாத (EoRMT) குழுக்களிடையில் காணப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

"இத்தகைய ஆன்லைன் கட்டண சேவைகள் பெரிய அமைப்புகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக சில கட்டண வழிமுறைகள் உள்ளடக்க ஹோஸ்டிங் சேவைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாத அமைப்புகள் நன்கொடையாளர்களைத் தேடி, திரள் நிதி (crowdfunding) பிரச்சாரத்தைத் தொடங்கி, ஆன்லைன் பேமெண்ட் வசதிகள் மூலம் நிதியைப் பெற பயன்படுத்தப்படலாம்," என்று FATF எச்சரித்தது.

இந்த வகையிலான பரிமாற்றங்களளில் பணத்தை அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதிகரிக்கும் கவலைகள்

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியளித்து ஆதரிக்கிறது என்றும் ராணுவத் தளவாடங்களை வழங்கி வருகிறது என்றும் இந்தியா நீண்ட காலமாகக் கூறிவருகிறது. இந்நிலையில், புல்வாமா மற்றும் கோரக்நாத் போன்ற இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்களை FATF தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது இந்தியாவின் கவலைகளை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசரத்தையும் உணர்த்துகிறது.

கடந்த ஜூன் மாதம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, FATF தனது கண்டனத்தை அளிக்கையை வெளியிட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு கிடைக்காமல் இது சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தியது. சமீபத்திய அறிக்கை, FATF அப்போதே கூறிய கருத்தை விரிவாக நிரூபித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!