சீன பதற்றம்: எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்கள் - முன்னாள் ராணுவத் தளபதியிடம் சொன்ன ராஜ்நாத் சிங்!

By Manikanda Prabu  |  First Published Dec 19, 2023, 1:36 PM IST

சீனாவுடனான எல்லை பதற்றத்தின் போது, முன்னாள் ராணுவத் தளபதியிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்து தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது


கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள ரெச்சின் லா மலைப்பாதையில் சீன ராணுவம் தனது டாங்கிகள் மற்றும் துருப்புகளை நகர்த்தியபோது, ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இரவு அப்போதைய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவிடம், உங்களுக்கு ஏற்றது என நீங்கள் கருதும் அனைத்தையும் செய்யுங்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே தனது நினைவுக் குறிப்பான 'Four Stars of Destiny' இல், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தலைவர் ஆகியோருக்கு இடையேயான அலைபேசி அழைப்புகளையும், ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதலையும், அன்றிரவு நடந்த முக்கியமான சூழ்நிலை குறித்தும் விவரித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ராஜ்நாத் சிங்கின்  அழைப்புக்குப் பிறகு, நரவனே தனது மனதில் நூறு வித்தியாசமான எண்ணங்கள் தோன்றியதாக கூறுகிறார். “நான் நிலைமையின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தேன். அவர் என்னை திரும்பவும் அழைப்பதாக கூறினார். அதன்படியே, இரவு 10.30 மணிக்கு என்னை மீண்டும் அவர் அழைத்தார்.” என தனது நினைவுக் குறிப்பில் நரவனே எழுதியுள்ளார்.

“பிரதமரிடம் பேசியதாகவும், இது முற்றிலும் ராணுவ முடிவு என்று கூறிய ராஜ்நாத் சிங், உங்களுக்கு ஏற்றது என நீங்கள் கருதும் அனைத்தையும் செய்யுங்கள் என என்னிடம் கூறினார். இப்போது முழு பொறுப்பும் என் மீது உள்ளது. ஆழ்ந்து முச்சை இழுந்து சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்தேன். சுவர் கடிகாரத்தின் டிக் டிக் ஓசையை தவிர அனைத்தும் அமைதியாக இருந்தது.” என நரவனே தெரிவித்துள்ளார்.

“நான் ராணுவ மாளிகையில் என்னுடைய குடிலில் இருந்தேன். ஜம்மு-காஷ்மீர், லடாக்கின் வரைபடம் ஒரு சுவற்றிலும், மற்றொரு சுவரில் கிழக்கு கட்டளையின் வரைபடமும் இருந்தது. அவை குறிக்கப்படாத வரைபடங்களாக இருந்தன. ஆனால் நான் அவற்றைப் பார்த்தபோது, ஒவ்வொரு அலகின் இருப்பிடத்தையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லா வகையிலும் தயாராக இருந்தோம், ஆனால் நான் உண்மையில் ஒரு போரைத் தொடங்க விரும்புகிறேனா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர்: முதல்வர் ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை!

“நாடு மோசமான நிலையில் இருந்தது, கோவிட் தொற்றுநோயின் கீழ் தத்தளிக்கிறது. பொருளாதாரம் தடுமாறியது, உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் உடைந்தன. இந்த நிலைமைகளின் கீழ், உதிரிபாகங்கள் போன்றவற்றின் நிலையான விநியோகத்தை உறுதிசெய்ய முடியுமா? உலகளாவிய அரங்கில் எங்கள் ஆதரவாளர்கள் யார்? சீனா, பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல் என்ன? என் மனதில் நூறு விதமான எண்ணங்கள் மின்னியது.” என நரவனே தமது நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார்.

ராணுவப் போர்க் கல்லூரியின் மணல் மாதிரி அறையில் நடக்கும் விளையாட்டு போர் அல்ல இது. ஆனால் வாழ்க்கை, இறப்பு சம்பந்தப்பட்டது என கூறும் நரவனே சில நிமிட அமைதியான சிந்தனைக்குப் பிறகு வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்கே ஜோஷை அழைத்ததாக் தெரிவித்துள்ளார்.

முதலில் நாம் துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என அவரிடம் தெரிவித்ததாகவும், அது சீனர்களுக்கு ஒரு சாக்காக அமைந்து விடும்; நம்மை கொடூரமானவர்கள் போல் சித்தரித்து விடுவார்கள். முந்தைய நாள் கூட, கைலாஷ் மலைத்தொடரில் முதலில் அவர்கள் தான் தாக்கினார்கள். பிறகுதான் நாம் தாக்குதல் நத்தினோன். அவர்கள் இரண்டு ரவுண்ட் சுட்டார்கள்; நாம் 3 ரவுண்டுகள் சுட்டு பதிலடி கொடுத்தோம். ஆனால், அது ஊடகங்களின் கவனத்தில் இருந்து தப்பி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன துருப்புகள் நம்மை விட குறைந்த உயரத்தில் இருந்ததாகவும் நேரடியாக நமது கண்காணிப்பில் இருந்ததாகவும் நரவனே கூறுகிறார். “எனவே, அவர்களாம் நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் அவர்கள் வலிமையுடன் வந்து, நமது பகுதிகளை சுற்றி வளைக்க முயற்சித்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமை பதட்டமாக இருந்தது.” என நரவனே எழுதியுள்ளார்.

அந்த பதட்டமான நாட்களில் இந்திய மற்றும் சீனப் படைகளின் முக்கியமான முடிவுகள் மற்றும் நகர்வுகளை நரவனேவின் நினைவுக் குறிப்பு வெளிப்படுத்துகிறது. தமது நிலை முக்கியமானதாக இருந்ததாகவும், அந்த சூழ்நிலையை கையாண்ட விதம் குறித்தும் அவரது நினைவுக் குறிப்பு விவரிக்கிறது. 

click me!