டெல்லியில் குளிர்காலத்தில் வீடற்றவர்களின் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் வீடற்ற மக்கள் 203 பேர் உயிரிழந்ததாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து விசாரிக்குமாறு சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழுவை ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின்போது, பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி வீடற்ற மக்களின் மரணங்கள் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை குறிப்பிட்டு கூட்டத்தொடரில் பேசிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ சஞ்சீவ் ஜா, வீடற்றவர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து ஜூன் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை மாத வாரியான தரவுகளை டெல்லி காவல்துறை இணையதளத்தை சரிபார்த்து கண்டறிந்ததாகக் கூறினார்.
undefined
அதில், அத்தகைய மரணத்திற்கான காரணம் விபத்துக்கள் அல்லது காயங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பாஜக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய விவகாரம் சலுகைகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறிய அவர், டெல்லி மக்களையும் தவறாக வழிநடத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், டெல்லியில் குளிர்காலத்தில் வீடற்ற மக்கள் 203 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்குமாறு சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழுவை ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புமாறு சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலை ஆளுங்கட்சி வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக, இதற்கான முன்மொழிவை சபாநாயகர் அவையில் முன்வைத்தார். தொடர்ந்து இந்த விவகாரமானது சிறப்புரிமைக் குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
காங்கிரஸின் பொது நிதி திரட்டும் திட்டம்: 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!
டெல்லி சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை எழுப்ப முயன்றனர், ஆனால் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதிக்கவில்லை. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து இதுதொடர்பாக விவாதம் நடத்த கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
“பொதுமக்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் விவாதிக்க டெல்லி அரசு தயாராக இல்லை. 203 பேரின் இறப்புக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்கவில்லை.” எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி குற்றம் சாட்டினார்.