
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் விவசாய கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் கடிதம்
இந்தநிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். மேலும் ராதாமோகன் சிங் உள்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அதில், விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி கடனை வசூலிக்க கூடாது என வங்கிகளை அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டு உள்ளார். வறட்சி நிவாரணம் தொடர்பாக உயர்மட்டக் குழுவை கூட்டவும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.