
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரை கண்டுபிடித்துக் கொடுத்தால், ரூ. 5 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவரின்பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
லக்னோவைச் நகர காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராஜேஷ் சிங் என்பவர் வைத்த இந்த பேனர் குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அகற்றப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோரின் ‘ஹைடெக்’ தொழில்நுட்ப பிரசாரம், சமூக ஊடகங்கள் மூலம் மோடியை மக்களிடத்தில் கொண்டு சென்றது, புதுவிதமான் முறையில் மோடிக்கு பிரசாரயுக்தியை சொல்லிக்கொடுத்தது ஆகியவற்றால், பாரதியஜனதா கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது.
பிரசாந்த் கிஷோரின் திறமையை பார்த்த நிதிஷ்குமார், 2015ம் ஆண்டு, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வரானார்.
இதை கவனித்த காங்கிரஸ் கட்சி, 5 மாநிலத் தேர்தலிலும் பிரசாந்த கிஷோரைதனது கட்சியின் தேர்தல் ஆலோசகராக நியமித்தது. ஆனால், அவரே உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களுக்கு முழுநேரமாகவும், உத்தரகாண்ட்மாநிலத்துக்கு பகுதிநேரமாகவும் ஆலோசனையாளராக செயல்பட்டார்.
அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஹரிஸ்ராவத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இதனால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்து, சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து, வெறுத்துப்போன லக்னோ நகர காங்கிரஸ் அலுவலகம் முன்பு, காங்கிரஸ் செயலாளர் ராஜேஷ் சிங், “ தேர்தல் ஆலோசகர் பிரசாந்த்கிஷோரைக் காணவில்லை. கண்டுபிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு'' என்று கூறி காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் நேற்றுமுன்தினம் பேனர்வைத்தார். இதனால், ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜ் பாபருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து ராஜேஷ் சிங்கிடம் விசாரணை நடத்தி, அந்தபேனரை அகற்ற உத்தரவிட்டார். அந்த நபரை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்செய்தார். “ தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்காமல் திடீரென ஒரு முடிவுக்கு வருவது தவறு’’ என ராஜ்பாபர் தெரிவித்தார்.
அதேசமயம், பேனர் வைத்த ராஜேஷ் சிங் கூறுகையில், “ கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் கடுமையாக வியர்வைசிந்தி உழைத்தோம். பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல், தட்டாமல் செய்தோம். தேர்தலில் சிறப்பான வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால், இப்போது நாங்கள் அடைந்த தோல்விக்கு பதில் தேவை'' எனத் தெரிவித்தார்.