
உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், 70 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில், நேற்று கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து கூறியதாவது-
‘‘மாணவர்களுக்கு ஆசிரியர் பணியில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. இதனால் உயர் கல்வி நிறுவனங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது பெரிய பிரச்சினையாக உள்ளது.
தற்போதைய நிலையில் மத்திய பல்கலைக்கழங்களில் 20 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. (மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், நாடு முழுவதும் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.)
மத்திய பகல்கலைக் கழகங்களில் காலி பணி இடங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவை சுயாட்சி கொண்ட நிறுவனங்கள் என்பதால், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய பல்கலைக்கழங்களிடமே உள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்காக, ஏற்கனவே உயர் கல்வி நிறுவன பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தி இருக்கிறோம்.
தேவைப்படும் பல்கலைக்கழங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் 70 வயது வரை ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது’’.
இவ்வாறு அவர் கூறினார்.