
துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் மத்திய அரசுடன் மோதல் போக்கு காரணமாகவே ஜக்தீப் தன்கர் தனது பதவி ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்ததாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவர் பதவி
இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணணும், இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று காலை 10 மணி முதல்15வது துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது பிரதமர் மோடி முதலில் வாக்களித்தார்.
சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த தேவ கவுடா
பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும் வாக்களித்தார். மேலும் முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை ஜேடி(எஸ்) நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.டி. தேவ கவுடா, 92 வயதில் சக்கர நாற்காலியில் வந்து துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் வாக்களித்தனர். நிதின் கட்கரியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது கைகுலுக்கிக் கொண்டனர்.
தேஜ கூட்டணி வெற்றி பெறுவது உறுதி
இதற்கிடையில், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளித்ததோடு, அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. சி.பி. ராதாகிருஷ்ணன் புதிய துணை குடியரசுத் தலைவராக வருவார் என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார்" என்று மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் சிறந்த தொண்டர்
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளித்தார். இது "நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் செயல்திறன்" ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேர்தல் என்றார். சுரேஷ் கோபி கூறுகையில், "இந்தத் தேர்தல் யாருக்கிடையில் தேர்ந்தெடுப்பது என்பது பற்றியது அல்ல. நாட்டின் குடிமக்களுக்கு மிகவும் தேவையான நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் செயல்திறனைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் இது. ஒரு நபராக, சி.பி. ராதாகிருஷ்ணன் சிறந்த தொண்டர் அல்லது என் சித்தாந்த அமைப்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் என்று நான் கண்டறிந்தேன்." நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. 424 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்புள்ளது. இது 391 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை விட அதிகம். வாக்குகள் எண்ணிக்கை மாலையில் நடைபெறும். (ANI)