
Vice Presidential Election : முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஜூலை 21, 2025 அன்று உடல்நலக் காரணங்களைக் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்தியாவின் 17-வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் (செப்டம்பர் 9, 2025) இன்று நடைபெறுகிறது. வேட்பாளர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயதுக்கு மேல் உள்ளவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தகுதியுடையவராகவும், எந்த அரசுப் பதவியிலும் இருக்கக் கூடாதவராகவும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் (67), தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமானவர் களத்தில் உள்ளார். இந்தியா கூட்டணி (INDIA) சார்பில் பி. சுதர்சன் ரெட்டி (79), தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் போட்டியில் உள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய 788 உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் NDA-வுக்கு 422 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால், சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாகக் கருதப்படுகிறது.
மேலும் பிஜு ஜனதா தளம் (BJD) தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஒடிசா மற்றும் அதன் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும், NDA மற்றும் INDIA கூட்டணிகளிடமிருந்து சமதூரம் வைத்திருப்பதாகவும் BJD-யின் எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்தார். இந்திய கூட்டணி கட்சியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். தேர்தல் இன்று (செப்டம்பர் 9, 2025) நடைபெறுகிறது, முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. NDA-வின் எண்ணிக்கைப் பலத்தால் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என பரவலாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர். பாராளுமன்ற மேல்சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக இருப்பதால் தற்போது 228 எம்பிக்கள் உள்ளனர். மொத்தமாக 782 எம்.பி.க்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். இந்த தேர்தலானது ரகசிய வாக்குசீட்டு முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. எனவே என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் அதிக வாக்குகளை யார் கைப்பற்றப்போவது யார் என கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலானது பாராளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்ததயைடுத்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் வெற்றி பெற வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.